வைத்தியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நோயாளிகள் அசௌகரியம்

Prabha Praneetha
2 years ago
வைத்தியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நோயாளிகள் அசௌகரியம்

அரச வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனால் மலையகத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளின் பணிகள் இடம்பெறவில்லை. குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பெருந்தொட்டங்களில் வாழும் மக்கள் இன்றைய தினமும் சிகிச்சைக்காக வருகை தந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

பல தூர பிரதேசங்களில் இருந்து வருகை தந்த நோயாளர்கள் வெளி நோயாளர் பிரிவுகளில் மருந்து எடுக்க முடியாததன் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

பொருளாதார நெருக்கடியில் வாழும் பெருந்தோட்ட மக்கள் பெரும்பாலும் அரச வைத்தியசாலைகளை நம்பியே சிகிச்சைக்காக வருகை தருகின்றனர்.

எனினும் இன்றைய தினமும் வைத்தியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் குதித்ததன் காரணமாக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக தூர பிரதேசங்களில் இருந்த வருகை தந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் ஒருசில வைத்தியர்கள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக மக்கள் இன்றைய தினம் மிகவும் குறைவாகவே சிகிச்சைக்காக வருகை தந்திருந்தனர்.

எனினும் அதிகமான வைத்தியர்கள் வராததன் காரணமாக குறிப்பிட்ட ஒரு சில நோய்களுக்காக சிகிச்சைக்காக வந்த மக்கள் சிகிச்சை பெற முடியாத நிலைமையே காணப்பட்டன.