இலங்கையில் உக்கிரமடையும் உணவுப் பஞ்சம்!

#SriLanka
Nila
2 years ago
இலங்கையில் உக்கிரமடையும் உணவுப் பஞ்சம்!

இலங்கையில் அடுத்த ஆண்டு அதாவது இன்னும் ஒரு வார காலப்பகுதியில் இருந்து உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற அபாயச் சங்கு ஊதப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தரப்பிலிருந்து முரண்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதேவேளை,ஜே. வி. பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

அடுத்து ஆண்டு ஆரம்பத்தில் இருந்து ஒரு வேளை உணவைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு ஜனாதிபதி ,பிரதமர் மற்றும் அமைச்சர்கள் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் நடைமுறைக்குப் பொருத்தமானதாக அமையாது என்று என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

பொருளாதாரப் பாதிப்பை எதிர்கொண்டுள்ள பொது மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் உரிய திட்டங்களை முன்னெடுக்காமலிருப்பது கவலைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் சிரேஷ்ட மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகார வட்டத்திற்குள் இருந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண தற்போது பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தால் முற்றாக ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக திஸ்ஸ விதாரண கடும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்துகின்றார் என்ற விமர்சனப் பார்வை உள்ளது.

ஆனால் தற்போது அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாக உள்ளவர்களும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்துகின்றனர்

அந்த வகையில் நாட்டில் தற்போது அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்மையான, புத்திசாலித்தனமான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆளுமையுடைய அமைச்சரவையை நியமிப்பதே ஒரே வழியாகும் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தற்போதுள்ள அமைச்சரவையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அத்தோடு, முதலில் தலைவர்களுக்குத் தவறான ஆலோசனைகளை வழங்கும் நேர்மையற்ற ஆலோசகர்கள் அகற்றப்பட வேண்டும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்கவை இலக்கு வைத்துள்ளார்.

ஏற்கனவே, ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தர மீது அமைச்சர்களான விமல் வீரவன்ஷ, உதய கம்மன்பில், வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில் அவர் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க மீது குற்றச்சாட்டு திரும்பியுள்ளது.

தற்போது பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் பொதுமக்கள் எரிபொருள் விலை உயர்வால் மேலும் தாங்க முடியாத சுமைக்கு ஆளாகியுள்ளனர்.

சீன உரம் மற்றும் கழிவுகளை அனுமதித்த நபர்கள் அது தொடர்பான முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அத்துடன் அவர்கள் அக் கப்பல்களுக்கு இழப்பீட்டையும் வழங்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க , வெளியிட்ட அதிரடிக் கருத்துக்கள் அரச தரப்பிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நிச்சயம் முழு நாடும் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும்.

அதனால் விவசாயத்துறையுடன் தொடர்புடைய தரப்பினர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.

சேதனப் பசளைத் திட்டம் சிறந்ததாக காணப்பட்டாலும் அது சவால்மிக்கது. நல்லாட்சி அரசாங்கத்திலும் சேதனப் பசளைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு கட்டம் கட்டமாகச் செயற்படுத்தப்பட்டது.

ஒரு தடவையில் இரசாயன உரத் தடை பாவனை மற்றும் இறக்குமதித் தடை செய்யப்பட்டதனால் விவசாயத்துறை பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது.

தற்போதைய நிலையில் எதிர்வரும் காலங்களில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என பொருளாதார மற்றும் துறைசார் நிபுணர்களின் எதிர்வுகூறலை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளேன்.

சேதனப் பசளைகளையும், இரசாயன பசளைகளையும் பெறமுடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். விவசாய பிரதேசங்களில் வாழும் மக்களின் நிலையை எம்மால் நன்கு உணர முடிகிறது.

விவசாயிகள் மாத்திரம் எதிர்கொண்ட பிரச்சினையை இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்த மக்களும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆனால், இவ்வாறான குற்றச்சாட்டுக்களை மறுக்கும் வகையில், அடுத்த ஆண்டு நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என தான் உறுதியளிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 90 முதல் 95 வீதமான நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என சிலர் கூறுகின்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போதைய நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காண செய்ய வேண்டியது விவசாய அமைச்சின் செயலாளர்களை நீக்குவது அல்ல, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரை நீக்குவது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விவசாய அமைச்சில் ஒரு செயலாளரால் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.