வவுனியா வைத்தியசாலையில் ஊடகவியலாளர் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

#Vavuniya #Hospital
Nila
2 years ago
வவுனியா வைத்தியசாலையில் ஊடகவியலாளர் உட்செல்ல  அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரை பார்க்கச்சென்ற சென்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலையில் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினருக்கு, தேவையான பொருட்களை வாங்கிச்சென்ற ஊடகவியலாளரை அவரது தொழிலை குறிப்பிட்டு வைத்தியசாலைக்குள் அனுமதிக்க முடியாது என காவலாளிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் சுகவீனமடைந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு உதவுவதற்காக சென்ற உறவினரான குறித்த ஊடகவியலாளர், வைத்தியசாலைக்குள் சென்று அவரை பார்வையிட்டதுடன், அவருக்கு தேவையான சில அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வைத்தியசாலைக்கு வெளியில் சென்றுள்ளார்.

கொள்வனவு செய்த பொருட்களை வழங்குவதற்காக மீண்டும் வைத்தியசாலைக்குள் அவர் சென்ற போது அவரை தடுத்துநிறுத்திய வைத்தியசாலையின் காவலாளிகள் நீங்கள் ஊடகவியலாளராக இருப்பதனால் உள்ளே அனுமதிக்க முடியாது என தெரிவித்து தடுத்து நிறுத்தினர்.

தமது மேலதிகாரி ஊடகவியலாளர்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என தங்களுக்கு உத்தரவு வழங்கியுள்ளதாகவும் குறித்த காவலாளிகள் தெரிவித்துள்ளனர்.

தான் பணி நிமித்தம் வரவில்லை என்று குறித்த ஊடகவியலாளர் அவர்களிடம் தெரிவித்தும் அவர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

குறித்த விடயம் தொடர்பாக அறிவதற்கு வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு ஊடகவியலாளரொருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியபோதும் அவரை தொடர்புகொள்ளமுடியவில்லை.

சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அந்தப்பகுதியில் நின்ற ஊடவியலாளர் உள்ளே செல்லாமல் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.