சீனா – இந்தியாவின் இராஜதந்திர போட்டிக்குள் யாழ்ப்பாணம்! கைப்பற்றப்போவது யார்?

#Jaffna #China #India
Nila
2 years ago
சீனா – இந்தியாவின் இராஜதந்திர போட்டிக்குள் யாழ்ப்பாணம்! கைப்பற்றப்போவது யார்?

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக்கான உரிமையை பெறுவதில் இந்தியா, சீனா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளும் கடற்றொழில் அமைச்சிடம் தமது விருப்பங்களை தெரிவித்துள்ளன.

இதேசமயம், கிளிநொச்சி – பூநகரி கௌதாரி முனையில் கடல் அட்டை பண்ணை வளர்ப்பில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டம் ஒன்றை செயல்படுத்த இந்தியா முயன்று வருகின்றது.

இதற்காக இந்தியாவுக்கு காணி வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியவேளை,

அவ்வாறு காணி வழங்கப்படவில்லை. அபிவிருத்திக்கு எம்மிடம் நிதியில்லை. எனவே, வெளிநாடுகள் வரும்போது அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனிடையே, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆயிரத்து 260 கோடி ரூபாய் செலவில் அமைக்க முன்வந்த பருத்தித்துறை துறைமுக நகர திட்டத்தை செயல்படுத்த இந்தியாவும் சீனாவும் இப்போது போட்டியிடுகின்றன என்று தெரிவித்த அமைச்சர்.

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார்.

அண்மையில், யாழ்ப்பாணம் வந்த சீனத் தூதுவர் கியூ சென் ஹொங் பருத்தித்துறை துறைமுகத்தையும் சென்று பார்வையிட்டார்.

அத்துடன், இங்கிருந்து இந்தியா எவ்வளவு தூரம் என்று கேள்வி எழுப்பியமையும், மன்னார், இராமர் பாலத்தில், ‘இது முடிவல்ல ஆரம்பமும்கூட’, என்று கருத்து வெளியிட்டமையும் இந்திய, சீனா மூலோபாய போட்டி வடக்கிலும் மையம் கொள்ள ஆரம்பித்து விட்டதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.