இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று! முக்கிய இருவர் பங்கேற்பு

Mayoorikka
2 years ago
இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று! முக்கிய இருவர் பங்கேற்பு

கோட்டா - மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள இந்த அமைச்சரவைக் கூட்டம்  தீர்மானமிக்க ஒன்றாக அமைந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி கூடிய அமைச்சரவை கூட்டத்தில், ஸ்ரீலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரை அழைக்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் இருவரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து இதன்போது, கலந்துரையாடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கடந்த இரண்டு அமைச்சரவைக் கூட்டங்களின் போது, ரூபாவின் பெறுமதியை  அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டம் தீர்க்கமானதாக இருக்கும் என  பெயர் குறிப்பிடாத ஸ்ரீலங்கா அமைச்சரவை அமைச்சரொருவர் கூறியுள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கா நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

எனினும், அதற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றத்தின் போது ஆறு முக்கிய அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அத்துடன் இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன