தெருவில் வீசப்பட்ட புத்தகங்களைக் சேகரித்தே நூலகம் அமைத்த தூய்மை பணியாளர்கள்!

Keerthi
2 years ago
தெருவில் வீசப்பட்ட புத்தகங்களைக் சேகரித்தே நூலகம் அமைத்த தூய்மை பணியாளர்கள்!

தெருவில் வீசப்பட்ட புத்தகங்களைக் கொண்டு நூலகம் அமைத்திருக்கிறார்கள் துருக்கியின் தூய்மைப் பணியாளர்கள்.

துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில், குப்பைகள் அகற்றும் தூய்மைப் பணியாளர்கள் இணைந்து நூலகம் அமைத்திருக்கிறார்கள். தெருவோரம் வீசப்படும் புத்தகங்கள் மற்றும் குப்பைகளோடு குப்பைகளாக கிடைக்கும் புத்தகங்களை சேகரித்து வைத்தனர்.

நாளாக நாளாக அந்த புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த புத்தகங்களை வைத்து என்ன செய்வதென யோசித்தார்கள் துப்புரவு பணியாளர்கள். அதற்குள்ளாக ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வந்துவிட்டது.

துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து புத்தகங்கள் சேகரிப்பதைப் பார்த்த துருக்கி மக்கள், தங்கள் வீடுகளில் இருக்கும் புத்தகங்களையும் அவர்களிடம் கொடுத்துவந்தனர். இந்த புத்தகங்களைப் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினரும் தூய்மைப் பணியாளர்களும் படித்து வந்தனர்.

பலர் இவர்களிடம் வந்து புத்தகங்கள் வாங்கிப் படித்துச் சென்றனர். இவர்கள் புத்தகம் சேமிக்கும் பழக்கம் தூய்மை இயக்கத்தைத் தாண்டி துருக்கி நகர் முழுவதும் தெரியவந்தது. இதையடுத்து, நூலகம் அமைக்கத் திட்டமிட்டார்கள் தூய்மைப் பணியாளர்கள்.

துருக்கி தலைநகர் அங்காராவில், நூலகம் அமைக்க அரசின் ஆதரவு கிடைத்தது. உள்ளூர் அரசாங்கத்தின் ஆதரவுடன், செப்டம்பர் 2017-ல் அங்காகராவில் நூலகம் திறக்கப்பட்டது. துப்புரவுத் துறைக்குச் சொந்தமான பழைய செங்கல் தொழிற்சாலையில் நூலகம் தொடங்கப்பட்டது.

தங்களுக்குக் கிடைத்தப் புத்தகங்களை பிரித்து அடுக்கத் தொடங்கினர். குழந்தைகளுக்கான இலக்கியங்கள், அறிவியல் புத்தகங்கள், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி என மொழிவாரியாகவும் புத்தகங்கள் பிரிக்கப்பட்டு நூலகம் அமைக்கப்பட்டது. அதோடு, சதுரங்கம் விளையாடக்கூடிய ஓய்வறையும் இங்கு உள்ளது. புத்தகத்தை அங்கேயே படிக்கலாம் அல்லது வீட்டுக்கு எடுத்துச் சென்றும் படிக்கலாம். வீட்டுக்கு எடுத்துச் செல்லும் புத்தகங்களை இரண்டு வாரங்களுக்குள் கொடுக்க வேண்டும். மற்ற எல்லா நூலகத்தைப் போலவே, வாசகர்களும் தங்கள் உறுப்பினர் உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக இந்த நூலகத்தின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நூலகத்தைப் பாதுகாக்க முழு நேர ஊழியர்களை பணியமர்த்தி உள்ளது துருக்கி அரசு. இந்த நூலகம் பெரும்பாலும் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளால் நிரம்பி இருக்கும். மேலும் அருகில் உள்ள பள்ளி குழந்தைகளும் இந்த நூலகத்துக்கு வருவதை மகிழ்ச்சியளிப்பதாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர், யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்த நூலகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது ஆறாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களால் இந்த நூலகம் நிரம்பி வழிகிறது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்