அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியின் 3-வது ‘டோஸ்’ ஒமைக்ரானுக்கு எதிராக பயனுள்ளது - ஆய்வு முடிவு
கொரோனாவுக்கு எதிராக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் உருவாக்கிய தடுப்பூசி, உலகின் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசிதான் இந்தியாவில் புனே சீரம் நிறுவனத்தால் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
தற்போது உலகமெங்கும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் 3-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று உலகமெங்கும் குரல் வலுத்து வருகிறது.
இந்தியாவிலும் முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்களுக்கும், இணைநோய்களை கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும் 3-வது டோஸ் தடுப்பூசி, முன்எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி என்ற பெயரில் போடப்படுகிறது. முதல் 2 டோஸ் என்ன தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அதுவே 3-வது டோசாக செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை 3-வது டோசாக செலுத்திக்கொண்டால், அது ஒமைக்ரானுக்கு எதிராக அதிகளவிலான ஆன்டிபாடிகளை (நோய் எதிர்ப்பு பொருளை) உருவாக்குகிறது என ஒரு ஆய்வு முடிவு காட்டுவதாக அஸ்ட்ரா ஜெனேகா கூறுகிறது. இந்த தகவல், தி லேன்செட் மருத்துவப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.
சோதனை செய்யப்பட்ட முதன்மை தடுப்பூசி அட்டவணையைப்பொருட்படுத்தாமல் (அதாவது முதல் 2 டோஸ்கள் எந்த தடுப்பூசியை போட்டிருந்தாலும்) 3-வது டோசாக அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை போட்டுக்கொள்கிறபோது, அது சீனாவின் கொரோனோ வேக் (சைனோவேக் பயோடெக்) தடுப்பூசியைக் காட்டிலும் கூடுதலான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது என கூறப்பட்டுள்ளது.
இது ஒமைக்ரானுக்கு எதிராக மட்டுமல்லாது, பிற உருமாறிய வைரஸ்களான பீட்டா, டெல்டா, ஆல்பா, காமா வைரஸ்களுக்கு எதிராகவும் நல்ல பாதுகாப்பைத்தரும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் இருந்து மாதிரிகளின் தனி பகுப்பாய்வு, ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக அதிகரித்த ஆன்டிபாடி பதிலைக்காட்டி உள்ளது.
இதுபற்றி அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்தின் செயல்துணைத்தலைவர் சர் மெனே பங்காலோஸ் கூறும்போது, “அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி உலகமெங்கும் உள்ள கொரோனாவில் இருந்து கோடிக்கணக்கான மக்களைப் பாதுகாத்துள்ளது. மேலும் மற்ற தடுப்பூசிகளுக்கு பிறகு பயன்படுத்தப்படும்போதுகூட மூன்றாவது பூஸ்டர் டோசாக இது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையே ஆய்வுத்தகவல்கள் காட்டுகின்றன” என குறிப்பிட்டார்.