இலங்கைக்கு அவசர பொருளாதார உதவி வழங்குவது குறித்து: இந்தியா வெளியிட்ட 7 அம்ச அறிக்கை!

#SriLanka #India
Reha
2 years ago
இலங்கைக்கு அவசர பொருளாதார உதவி வழங்குவது குறித்து: இந்தியா வெளியிட்ட 7 அம்ச அறிக்கை!

இலங்கைக்கு அவசர பொருளாதார உதவி வழங்குவது குறித்த பேச்சுக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

டொக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கைக்கான இந்தியாவின் பெரியளவிலான உதவித் திட்டத்தை இறுதி செய்தனர்

ஜனவரி 15, 2022 அன்று வெளிவிவகார அமைச்சர் Dr. S. ஜெய்சங்கர், இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உடன் ஒரு மெய்நிகர் சந்திப்பை நடத்தினார். கடந்த மாதம் திரு. ராஜபக்சவின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து இந்த உரையாடல் நடைபெற்றது.

1. இலங்கையிலும், இந்தியாவிலும் ஜனவரி 15ஆம் திகதி தைப்பொங்கல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இரு தரப்பும் பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

2. டொக்டர் ஜெய்சங்கர், இந்தியா எப்பொழுதும் இலங்கையுடன் நிற்கிறது என்றும், கோவிட்-19 தொற்றுநோயால் முன்வைக்கப்படும் பொருளாதார மற்றும் பிற சவால்களை சமாளிப்பதற்கு இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தார். நெருங்கிய நண்பர்கள் மற்றும் கடல்சார் அண்டை நாடுகளாக, இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய பொருளாதார தொடர்புகளால் ஆதாயமடைகின்றன.

3. சார்க் நாணய மாற்று ஏற்பாட்டின் கீழ் இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நீடிக்கப்படுவதை இரு அமைச்சர்களும் சாதகமாக குறிப்பிட்டனர். இரண்டு மாதங்களுக்குள் 515.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தீர்வு வழங்கப்படுவது இலங்கைக்கு உதவும்.

4. உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 500 மில்லியன் டொலர்கள் இந்தியக் கடன் வசதியை விரிவுபடுத்துவதற்கான முன்னேற்றத்தை இரு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர்.

5. இலங்கையுடன் இந்தியாவின் நீண்டகால ஒத்துழைப்பை பஷில் ராஜபக்ச நினைவு கூர்ந்து, ஆதரவு நடவடிக்கைகளை ஆழ்ந்து பாராட்டினார். துறைமுகங்கள், உள்கட்டமைப்பு, எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சாரம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல முக்கியத் துறைகளில் இலங்கையில் இந்திய முதலீடுகளை வரவேற்றுள்ள அவர், அத்தகைய முதலீடுகளை ஊக்குவிக்க உகந்த சூழல் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்த நிலையில், திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணைகளை கூட்டாக நவீனமயமாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் அண்மையில் எடுத்த நடவடிக்கைகள் இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதுடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என இரு அமைச்சர்களும் குறிப்பிட்டனர்.

6. இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை, மனிதாபிமான அடிப்படையில் விரைவில் விடுதலை செய்வதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

7. பகிரப்பட்ட முன்னேற்றம் மற்றும் செழுமைக்கான நீண்டகால பொருளாதார கூட்டாண்மையை நோக்கி பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை வழிநடத்துவதற்கு நெருக்கமான தொடர்பில் இருப்பதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.


மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்