பொரளை தேவாலய கைக்குண்டு சம்பவம்- வைத்தியரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக் கிடங்கு

#Police
Prathees
2 years ago
பொரளை தேவாலய கைக்குண்டு சம்பவம்- வைத்தியரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக் கிடங்கு

பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 76 வயதுடைய ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரின் வீட்டில் ஆயுதக் கிடங்கு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மீட்கப்பட்ட ஆயுதங்களில் நான்கு கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவோல்வர், இரண்டு வாள்கள், ஒரு ரம்போ கத்தி மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கியும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஓய்வு பெற்ற மருத்துவரால் என்ன காரணத்திற்காக இந்த ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டது என்பது இதுவரை வெளியாகவில்லை.

எனினும் பொழுதுபோக்காக துப்பாக்கி சேகரிப்பு செய்வதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

பொரளை தேவாலயத்தில் வெடிகுண்டு வைத்த சம்பவம் மற்றும் நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் குண்டு வைத்த  சம்பவத்திலும் இவருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொரளை தேவாலய குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் பனாமுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரான வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹரகம பகுதியில் உள்ள வைத்தியரின் மூன்று மாடி வீட்டின் தரைத்தளத்தில் உள்ள படுக்கையறையில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

குறித்த வைத்தியர் பிலியந்தலை பிரதேசத்தில் சுகாதார நிலையமொன்றை நடத்தி வருவதுடன்இ பனாமுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுமார் 8 வருடங்களாக குறித்த நிலையத்தில் பாதுகாவலராக கடமையாற்றியுள்ளார்.

மருத்துவரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அரசாங்க பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

சந்தேகத்திற்குரிய வைத்தியர் நீண்டகாலமாக பிலியந்தலை வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியாகவும் கடமையாற்றியவர்.

பனாமுர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட  சந்தேக நபரும்  வைத்தியரும் துறைமுக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.