கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற குடும்பம் பனியில் உறைந்து உயிரிழப்பு

கனடா மற்றும் அமெரிக்க எல்லை மாகாணங்கள் கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கனடா நாட்டின் எமர்சன் எல்லைப்பகுதியில் உயிரிழந்த நிலையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட நான்கு பேரின் உடல்களை மானிடோபா காவல் துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.
அவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மனிடோபா மாகாணத்தில் இருந்து அமெரிக்காவிற்குள் அவர்கள் நுழைய முயன்றதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இறந்தவர்களில் 2 பேர் பெரியவர்கள். ஒருவர் நடுத்தர வயது உடையவர். அமெரிக்காவில் மனித கடத்தலில் ஈடுபட்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இறந்தவர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படுகிறது.
எல்லையை எளிதாக கடந்து விடலாம் என்று நினைத்து கிளம்பிய அவர்கள் பனியில் சிக்கியிருக்கலாம் என்று கனடா போலீசார் குறிப்பிட்டுள்ளனர். எல்லைப்பகுதியில் வெப்பநிலை மைனஸ் 35 டிகிரிக்கு கீழ் சென்று விட்ட நிலையில் பனியில் உறைந்து அவர்கள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நடந்த சம்பவம் குறித்து விளக்கமளிக்குமாறு அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு இந்திய தூதர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
இறந்த நான்கு பேரின் குடியுரிமையை உறுதிப்படுத்திய கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா, இந்த நிகழ்வு ஒரு துயரமான சோகம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய தூதரகக் குழு ஒன்று டெரான்டோவில் இருந்து மனிடோபாவிற்கு செல்வதாகவும், நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு கனடா அதிகாரிகளுடன் இணைந்து இந்திய அதிகாரிகள்பணியாற்றுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



