கொழும்பை அச்சுறுத்தும் முதலைகள் தொடர்பில் அதிகாரிகள் எடுக்கவுள்ள நடவடிக்கை!

#Colombo
Nila
2 years ago
கொழும்பை அச்சுறுத்தும்  முதலைகள் தொடர்பில் அதிகாரிகள் எடுக்கவுள்ள  நடவடிக்கை!

நாட்டில் அண்மைய காலமாக முதலைகள் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. தெஹிவளை கடலில் சுழியோடி ஒருவர் முதலை தாக்குதலுக்கு உள்ளாகி மரணமான சம்பவத்தை அடுத்தே முதலைகளை பற்றிய பேச்சுக்கள் ஆரம்பமாகின.

கடந்த 3 ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தில் 57 வயதான சுழியோடி உயிரிழந்தார். இதனை தவிர கொழும்பில் சில பிரதேசங்களில் முதலைகள் காணப்பட்ட செய்திகள் வெளியாகின.

கொழும்பை அண்டிய கடலுக்குள் முதலைகள் வந்துள்ளதால், சுழியோடிகள் மாத்திரமல்லாது கடல் தொழில் செய்து வருவோரும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இவ்வாறான நிலைமையில், கொழும்பை அண்டிய கடற்பரப்பிற்குள் முதலைகள் வருவதை தடுக்க புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொல்கொட ஆறு மற்றும் பேர் குளம் ஆகியவற்றில் இருந்து தண்ணீர் கடலில் கலக்கும் இடங்களில் வலைகளை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பை அண்மித்துள்ள நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முதலைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பொல்கொட ஆறு மற்றும் தியவன்னா ஆறு ஆகியவற்றில் உள்ள முதலைகள் பேர குளத்தின் வழியாக கடலுக்குள் செல்வதாக தெரியவருகிறது. பொல்கொட மற்றும் பேர ஆகியன கடலில் கலக்கும் இடங்களில் வலைகளை அமைத்தாலும் முதலைகள் தரை வழியாக கடலுக்குள் செல்லலாம்.

எனினும், கொழும்பை அண்மித்த பகுதிகளில் இருக்கும் முதலைகள் சுற்றுச்சூழலுக்கு பெறுமதியான பங்களிப்பை செய்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொழும்பில் உள்ள நீர் நிலைகளில் இருக்கும் இந்த விலங்குகள் இயற்கை துப்பரவு பணியாளர்களாக செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். நீர் நிலைகளில் வீசப்படும் பூனைகள், நாய்களின் உடல்களை இந்த முதலைகள் உணவாக உட்கொண்டு வருகின்றன.

கொழும்பை அண்மித்த பகுதிகளில் முதலைகள் இல்லை என்றால், பேர குளம் உட்பட நீர் நிலைகள் அமைந்துள்ள பிரதேசங்கள் மேலும் அசுத்தமாக இருக்கும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.