உலகிலேயே அதிக சத்தம் எழுப்பக்கூடியது திமிங்கலமா....? எத்தனை வகைகள் இருக்கிறது... அரிய தகவல்கள் இதோ...!!

Keerthi
2 years ago
உலகிலேயே அதிக சத்தம் எழுப்பக்கூடியது திமிங்கலமா....? எத்தனை வகைகள் இருக்கிறது... அரிய தகவல்கள் இதோ...!!

கடல், வெளியில் இருந்து பார்த்தால் அமைதியாக எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி  காணப்படுகிறது. ஆனால், கடலுக்குள் ஏராளமான உயிரினங்கள் வாழ்கிறது. அதில், அழகாக  வித்தியாசமான உயிரினங்களும் வாழ்கிறது. அதில் ஒன்று தான் திமிங்கலம். திமிங்கலங்கள் மொத்தம் 75 வகைகள்.

ஸ்பெர்ம் திமிங்கலம், வெள்ளி திமிங்கலம், அழகு திமிங்கலம், பல் திமிங்கலம் போன்ற பல வகைகள் இருக்கிறது. திமிங்கலம், நீரில் வாழக் கூடியது. மேலும், பாலூட்டி இனம். பொதுவாக, அனைத்து மீன்களுமே முட்டையிட்டு தான் குஞ்சு பொரிக்கும். ஆனால், திமிங்கலம், குட்டி  போட்டு பால் கொடுக்கக் கூடிய பாலூட்டி வகையை சேர்ந்தது.

அந்த வகையில், உலகின் மிகப்பெரிய பாலூட்டி நீல திமிங்கலம் தான். திமிங்கலத்திலேயே நீல திமிங்கலம் தான் மிக நீளமாக வளரும். திமிங்கலம் மிகவும் அமைதியான உயிரினம் என்று கூறப்படுகிறது. சுறாவுடன் ஒப்பிட்டால், திமிங்கலம் அதிக அமைதியானது. மேலும், படகுகள், கப்பல்கள் போன்று கடலுக்குள் எது சென்றாலும், திமிங்கலம் அதன் அருகில் சென்று தொந்தரவு செய்யாது.

திமிங்கலம், 100 அடி நீளமும் 150 டன் எடையும் கொண்டது. பொதுவாக மீன்கள், தன் செவுள்கள் மூலம் தான் சுவாசிக்கும். ஆனால், நீலத்திமிங்கலம் மனிதர்களை போன்று நுரையீரல் மூலம் தான் சுவாசிக்கிறது. மேலும், அதன் நாக்கில் சுமார் 50 பேர் அமர முடியும் என்று கூறப்படுகிறது. இது மிகவும் ஆச்சர்யமானது தான்.

திமிங்கலங்கள் வெப்ப ரத்த பிராணிகள். மனிதர்களை போன்றே திமிங்கலத்திற்கும் இதயத்தில் 4 அறைகள் உள்ளது. மேலும், அதன் தலைப்பகுதியில் குழாய் போன்ற ஒரு அமைப்பு இருக்கும். இது மேல் நோக்கியவாறு துளை போன்று இருக்கும். இந்த துளைகள் மூலம் தான் திமிங்கலம் சுவாசிக்கும்.

திமிங்கலங்கள் நிலத்தில் வாழ்வதற்கேற்றது என்று கூறப்படுகிறது. சுமார், 54 மில்லியன் வருடங்களுக்கு முன், திமிங்கலங்கள் பசு போன்ற பாலூட்டியிலிருந்து வந்தது. இவை, 50 மில்லியன் வருடங்களுக்கு முன் நீர் மற்றும் நிலத்தில் வாழ்ந்திருக்கிறது. ஆனால், அதன்பிறகு 5 முதல் 10 மில்லியன் வருடங்களில் திமிங்கலங்களின் தோற்றங்கள் மாற்றமடைந்து முழுமையாக நீரில் வாழக்கூடிய உயிரினமாக மாறியது.

திமிங்கலங்கள், நுரையீரல் மூலமாக சுவாசிப்பதால், அவை கடலின் மேற்பரப்பில் வந்து சுவாசித்துவிட்டு செல்லுமாம். அவ்வாறு மீண்டும் திமிங்கலங்கள் கடலுக்குள் செல்லும்போது, அதன் மூக்கில் தண்ணீர் செல்லாமல் இருக்க மூடி போன்ற அமைப்பு மூடிக்கொள்ளுமாம். சில திமிங்கலங்களுக்கு ஒரு துளை கொண்ட மூக்கும், சிலவற்றிற்கு 2 துளைகள் கொண்ட மூக்கும் இருக்கிறது.

ஒரே ஒரு முறை முழுவதுமாக நுரையீரலில் காற்றை நிரப்பி வைத்துக்கொண்டு, ஏறக்குறைய  7,000 அடி ஆழம் வரை அவைகளால் கடலுக்குள் செல்ல முடியும் என்பது ஆச்சர்யமான உண்மை.  இதற்கு காரணம், மனிதர்கள் சுவாசிக்கும் போது காற்றின் மூலமாக 15% ஆக்சிஜனை நுரையீரல் எடுக்கிறது.

ஆனால், திமிங்கலம் ஒரு முறை சுவாசிக்கும் போது, காற்றிலிருந்து 90% ஆக்சிஜனை பெறுகிறது. திமிங்கலத்தின் சுவாச மண்டலம் நீரில் வாழ்வதற்கேற்ப மாறுபட்டிருக்கிறது. இதற்கு காரணம், திமிங்கலங்கள் தண்ணீரில் மூழ்கும் போது, ரத்த ஓட்ட அளவு, இதய துடிப்பு, ஆக்சிஜன் உபயோகிக்கும் திறன் போன்றவற்றின் அளவு குறைகிறது. இதனால் தான், திமிங்கலங்கள் மறுமுறை சுவாசிக்க தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது.

திமிங்கலங்கள், தங்களுக்கான இரையை தேடி கடலின் நீண்ட ஆழத்திற்கு செல்லும். ஆழ் கடலில், அதிகமான இருட்டு தான் இருக்கும். சிறிதும் வெளிச்சம் இருக்காது. ஆனால், வெளிச்சத்தை தரக்கூடிய தன்மை கொண்ட மீன்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், திமிங்கலங்களுக்கு தங்களுக்கான இரை எங்கிருக்கிறது? என்பது தெரியாது.

எனவே, இவை சத்தமிடும். அந்த சத்தம் எதிரில் இருக்கும் பொருளின் மீது எதிரொலிக்கும். அதனை வைத்து, தனக்கான இரையை திமிங்கலங்கள் கண்டுபிடிக்கிறது. கடலின் அழுத்தத்தை தாங்கும் அளவிற்கு அதன் நுரையீரல் உட்பட உடலின் அமைப்பு இருக்கிறது. கடும் குளிர் பிரதேசங்களில் இருக்கும் திமிங்கலங்கள், வெப்பமான பகுதிகளுக்கு இடம்பெயரும்.

அப்போது தான் அவை இனப்பெருக்கம் செய்கிறது. மேலும், பெண் திமிங்கலத்தின் கர்ப்பகாலம் 12 முதல் 17 மாதங்கள் ஆகும். பெண் திமிங்கலம் குட்டி போடும் சமயத்தில், அதனை சுற்றி பல திமிங்கலங்கள் வட்டமிடும். குட்டி திமிங்கலம் பிறந்தவுடன், மற்ற திமிங்கலங்கள் ஒன்று சேர்ந்து அதனை சுவாசிக்க வைப்பதற்காக கடலின் மேல்பரப்பிற்கு கொண்டு செல்லும்.

ஒரு திமிங்கலம் பிறக்கும் போதே யானையின் எடைக்கு நிகராக இருக்கும் என்று கூறப்படுகிறது. பெண் திமிங்கலங்கள் 2 முதல் 4 வருடங்களுக்கு ஒரு முறை குட்டியிடும் தன்மையுடையது. எனவே, இதன் பிறப்பு விகிதம் குறைவு தான். உலகிலேயே அதிக அளவு சத்தமிடும் உயிரினம் திமிங்கலங்கள் தான்.

ஆனால், அவை தண்ணீரில் இருப்பதால் அதன் சத்தம் நமக்கு சிறிதும் கேட்பதில்லை. இவற்றின் சத்தம் ஏறக்குறைய 500 மைல் தொலைவு வரை கேட்குமாம். இவை 188 டெசிபல் வரை சத்தம் எழுப்ப முடியும். இதில், ஸ்பெர்ம் திமிங்கலம் 230 டெசிபல் வரை சத்தமிடும். இது மிக அதிகமான சத்தம்.

கடல் ஆராய்ச்சியாளர்கள் திமிங்கலங்களின் சத்தத்தை 50 முதல் 100 மைல் தொலைவில் நம்மால் கேட்க முடியும் என்று கூறுகிறார்கள். ஆனால், அவற்றின் சத்தம் 500 மைல் வரை செல்லும். திமிங்கலங்கள் தன் மூக்கு பகுதி வழியாக தான் சத்தங்களை எழுப்புகிறது. மற்ற திமிங்கலங்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதற்காக தான் இவை சத்தம் எழுப்புகிறது.

திமிங்கலங்களின் ஆயுட் காலம் 70 வருடங்கள். ஸ்பெர்ம் திமிங்கலங்கள், தன் வாழ்நாளில் உலகையே ஒரு முறை வலம் வரும் அளவிற்கு நீந்தும் என்று கூறப்படுகிறது. திமிங்கலங்களின் சத்தம் இசை போல் இருக்கும் என்று கூறப்படுகிறது. முன் காலத்தில், திமிங்கலங்கள் கொழுப்பு படிவத்திற்காக வேட்டையாடப்பட்டிருக்கிறது.

விளக்கிற்கு எண்ணையாக அந்த கொழுப்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 1940-ஆம் வருடங்களுக்கு பிறகு திமிங்கலங்களின் எண்ணிக்கை குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, கடந்த 1946 ஆம் ஆண்டு, சர்வதேச திமிங்கல பிடிப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் சில நாடுகள் பங்குபெற்றது.

1986 ஆம் வருடத்தில், சர்வதேச திமிங்கலங்கள் பிடிப்பு அமைப்பு, சில வகை திமிங்கலங்கள் அழியக்கூடிய நிலையில் இருப்பதால், அவற்றை வேட்டையாட கூடாது என்று அறிவித்தார்கள். ஆனால் அந்த சட்டங்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது தெரியவில்லை. மொத்தத்தில், கடல் வாழ் உயிரினங்கள் அனைத்துமே பாதுகாக்கப்பட வேண்டியது தான். அவற்றை காப்பது நம் கடமை.