காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளாக இருந்தாலும் அவர்களின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்: நீதி அமைச்சர்

Mayoorikka
2 years ago
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளாக இருந்தாலும் அவர்களின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்: நீதி அமைச்சர்

வடக்கில் யுத்த காலகட்டத்தில் காணமால் போனவர்கள் யார் என்பது முக்கியமல்ல, காணமால் ஆக்கப்பட்ட நபர்கள் விடுதலைப்புலிகளாக இருந்தாலும் பிரச்சினை அல்ல, அவர்களின் குடும்பத்தினருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

எனினும்  வடக்கில் காணமால் ஆகப்பட்டதாக கூறப்படும் நபர்கள் பலர் குறித்து எம்மிடத்தில் ஆதாரங்கள் எதுவுமே இல்லை. ஆகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ள சாட்சியங்களை பெற்றுக்கொண்டு இந்த பிரச்சினைகளை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கின்றது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இன்று தொடக்கம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் நீதிக்கான அணுகல் சேவை வேலைத்திட்டம் தொடர்பில் நேற்று நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

நல்லிணக்க வேலைத்திட்டங்களில் நீதிப்பொறிமுறையின் நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும், மக்களுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதும் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. ஆகவே நல்லிணக்க வேலைத்திட்டங்களை வடக்கில் இருந்து ஆரம்பிக்கவுள்ளோம்.

குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் எம்மத்தியில் எந்த முரண்பாடுகளும் இல்லை, எனினும் இந்த செயற்பாடுகளில் கால அவகாசம் தேவைப்படுகின்றது, அதுவே சில நெருக்கடிகளுக்கும் ஏதுவாக அமைகின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதும், நல்லிணக்க வேலைத்திட்டங்களில் தேசிய மற்றும் சர்வதேச பிரச்சினைகளை தீர்க்கவும் அதன் மூலமாக இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதுமே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கான தேசிய பொறிமுறை ஒன்றினை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஆகவே தான் சகல விடயங்களையும் நீதிமன்ற கட்டமைப்பின் மூலமாக கையாளாது மாற்று வேலைத்திட்டங்களின் மூலமாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்க எத்தனிக்கின்றோம். குறிப்பாக வடக்கு மக்களின் காணி பிரச்சினைகளை தீர்க்கவும், வடக்கில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள கடன் நெருக்கடிகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் விசேட இணக்க சபைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.

கடன் நெருக்கடிகளை தீர்க்க வெவ்வேறு மாவட்டங்களில் இணக்க சபைகள் இயங்குகின்றன. வடக்கிலும் வங்கிகளின் மூலமாக பெற்றுக்கொண்ட கடன்கள் தவிர்ந்து ஏனைய நிதி நிறுவனங்களின் மூலமாக கடன்களை பெற்று தற்போது நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் மக்களுக்கான தீர்வுகளை இந்த இணக்க சபைகளின் மூலமாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் அரச நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் பொதுமக்களின் காணிகளை உரிய மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீண்ட நாட்களுக்கு இந்த வழக்குகளை இழுத்தடிக்காது வாத பிரதிவாதங்களை முன்னெடுக்காது விரைவாக இவற்றை தீர்க்க விசேட நீதிமன்றங்களும் அமைக்கப்படும்.

அதேபோல் காணாமால்போனர் விடயத்தில் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க வேண்டியுள்ளது. நீண்ட காலமாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.

ஆகவே அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு நாம் வழங்கக்கூடிய தீர்வுகள் என்ன, பாதிக்கப்பட்ட தரப்புக்கு நட்டஈடு வழங்குவது மற்றும் காணாமல் ஆகப்பட்டதாக கூறப்படும் நபர்களுக்கு மரண சான்றிதழ்கள் வழங்கி இந்த பிரச்சினைகளை இத்துடன் நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை ஜனாதிபதி தொடர்ச்சியாக எம்மிடத்தில் வலியுறுத்தி வருகின்றார். அதுமட்டுமல்ல, வடக்கின் அரச அதிகாரிகளை சந்தித்து அம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளை வழங்குவது என்பதே எமது நோக்கமாகும்.

நல்லிணக்க வேலைத்திட்டங்களை உருவாக்கும் சந்தர்ப்பத்தில் வடக்கில் இருந்து இதனை ஆரம்பிக்க வேண்டும். வடக்கு தெற்கு மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்றால் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

வடக்கில் காணமால் ஆக்கப்பட்ட நபர்களின் உறவினர்களின் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ள வேண்டும், ஆதாரங்களுடன் அவற்றை ஒன்று திரட்டி பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். காணமால் ஆகப்பட்டோர் பற்றிய அலுவலகம் மற்றும் உத்தேச இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றை கொண்டு இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இம்முறை வரவு செலவு திட்டத்திலும் இதற்கான முன்னூறு மில்லியம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல காணாமால் போனதாக கூறப்படும் நபர்களின் குடும்பத்தினருக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படும் என்றால் அல்லது மனநல ஆலோசனைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றால் அவற்றை ஏற்பாடு செய்யவும் தயாராக உள்ளோம்.

காணாமால் ஆக்கபட்டோர் பற்றிய அலுவலகம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் இன்னமும் முழுமையடையவில்லை, இவ்வளவு காலமாக அதற்கான முறையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. எனவேதான் இப்போது இவற்றை நடைமுறைப்படுத்த நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.