தெற்கு கடலில் ஹெரோயினுடன் கைதானவர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

Prathees
2 years ago
தெற்கு கடலில் ஹெரோயினுடன் கைதானவர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

இலங்கைக்கு தெற்காக சர்வதேச கடல் எல்லையில் 330 கிலோகிராம் ஹெரோயினுடன் கைதான 17 சந்தேக நபர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த கடல் எல்லையில் சுமார் 3,300 மில்லியன் ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 17 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அரச புலனாய்வு சேவை, கடற்படையினர் மற்றும் காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்த போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் துபாயில் உள்ளதோடு அவர் அங்கிருந்து இவ்வாறு வர்த்தகத்திற்காக போதைப் பொருளை அனுப்பியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டது.