உயிர் வாழ குழந்தைகளையும், உடல் உறுப்புகளையும் விற்கும் ஆப்கான் மக்கள்..வெளியான தகவல்.!!!..

Keerthi
2 years ago
உயிர் வாழ குழந்தைகளையும், உடல் உறுப்புகளையும் விற்கும் ஆப்கான் மக்கள்..வெளியான தகவல்.!!!..

ஆப்கானிஸ்தானில் கடும் பஞ்சம் நிலவுவதால் மக்கள் குழந்தைகளையும், உடல் உறுப்புகளையும் விற்று வாழ வேண்டிய நிலையில் உள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத் தலைவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த போரின் முடிவில் தாலிபான்கள் அதிரடியாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றினார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் தா லிபான்கள் கைக்குள் ஆப்கானிஸ்தான் வந்து விட்டது.

தாலிபான்களின் கடந்த கால ஆட்சி மிகவும் கொடுமையாக இருந்தது. இதனால் அவர்கள் ஆட்சியை பிடித்தது முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் சாரை, சாரையாக வெளியேறினார்கள்.'இந்த முறை இவ்வாறு இருக்காது. பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சுதந்திரம் அளிக்கப்படும்' என்று தாலிபான்கள் உறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் பேச்சு ஒரு மாதிரி, செயல்பாடு வேறு மாதிரியாக உள்ளது. ஒருபக்கம் மக்கள் மீது அடக்குமுறை திணிக்கப்படும் நிலையில், மறுபுறம் ஆப்கானிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

பல வருடம் நடந்த போர்களின் விளைவாக ஆப்கானிஸ்தான் மக்கள் வறட்சி, பொருளாதார சரிவு மற்றும் தொற்றுநோய் பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். இந்த கடினமான நிலையில் ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் குழந்தைகளையும், உடல் உறுப்புகளையும் விற்று உயிர் பிழைத்து வருவதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத் தலைவர் டேவிட் பேஸ்லி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கூறிய அவர், ' ஆப்கானிஸ்தான் ஏற்கனவே உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருந்தது, குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் தலிபான்களுடன் மோதலில் இருந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். சுமார் 24 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தை அனுபவித்து வருகின்றனர்.இந்த குளிர்காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பஞ்சத்தை எதிர்கொள்வார்கள். அதாவது 97 சதவீத மக்கள் இந்த ஆண்டு வறுமைக் கோட்டிற்கு கீழே விழலாம்.

ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் குழந்தைகளையும், உடல் உறுப்புகளையும் விற்று உயிர் வாழ்ந்து வருகின்றனர். எனவே சர்வதேச நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான உதவிகளை விரைந்து செய்ய வேண்டும். ஏனெனில் இப்போது நாம் எதிர்கொள்வது பேரழிவு. பட்டினியின் கதவைத் தட்டுபவர்களின் எண்ணிக்கை 40 மில்லியன் மக்களில் 23 மில்லியன் மக்கள். ஆப்கானிஸ்தானின் தற்போதைய பசி நெருக்கடியைத் தீர்க்க உலக பணக்காரர்கள் முன்வர வேண்டும்'