கொரோனா பரிசோதனை செய்பவர்கள் விவரங்களை தெரிந்து கொள்ள உதவும் ‘அல் ஹொசன்’ செயலிக்கு அமெரிக்க விருது

Keerthi
2 years ago
கொரோனா பரிசோதனை செய்பவர்கள் விவரங்களை தெரிந்து கொள்ள உதவும் ‘அல் ஹொசன்’ செயலிக்கு அமெரிக்க விருது

அமீரகத்தில் கொரோனா பரிசோதனை செய்பவர்கள் தங்களின் விவரங்களை தெரிந்து கொள்ள உதவும் வகையில் ‘அல் ஹொசன்’ செயலி இருந்து வருகிறது. இந்த செயலி அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அமைச்சகம், ‘அல் ஹொசன்’ தேசிய சுகாதார அமைப்பு உள்ளிட்டவற்றின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது அமீரகத்தின் அதிகாரப்பூர்வ செயலியாக இருக்கிறது.

சுகாதாரத்துறையில் சிறப்பான பயன்பாடு காரணமாக அமெரிக்காவின் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த செயலி (குளோபல் எக்சலன்ஸ்) என்ற விருது ‘அல் ஹொசன்’ செயலிக்கு வழங்கப்பட்டுள்ளது. சமூகத்துக்கும், பொதுமக்களுக்கும் இந்த செயலி சிறப்பான சேவையை வழங்கி வருவதால் சிறந்த செயலிக்கான விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலி சுகாதார சேவையை டிஜிட்டல் முறையில் தெரிந்து கொள்ள உதவியாக இருப்பதுடன், கொரோனா பரவலை தடுப்பதற்கும் முக்கியான பங்களிப்பை வழங்கி வருகிறது. கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து அமீரக அரசு இந்த செயலியை பயன்பாட்டுக்கு ஏற்படுத்தியது.

பொதுமக்கள் தாங்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட விவரங்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரங்கள் உள்ளிட்டவற்றை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு விலக்கு உள்ளிட்ட காரணங்கள் ஒருவருக்கு இருந்தால் அது குறித்த விவரங்களை இந்த செயலியின் மூலம் தெரியலாம். இந்த செயலியில் அரபி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் வசதி உள்ளது.

இந்த செயலியில் உள்ள க்யூ.ஆர். குறியீட்டின் மூலமும் பொதுமக்கள் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். இதனை பயன்படுத்தி பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் படித்து வரும் பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவிகள் போட்டுள்ள தடுப்பூசி விகிதங்களை தெரிந்து கொள்ளலாம்.

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி, அபுதாபி பார்முலா ஒன் கார் பந்தயம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை விவரங்களை தெரிவிக்கவும் இந்த செயலி உதவுகிறது. இதனை பயன்படுத்தும் பயனாளிகளின் தகவல்கள் அனைத்தும் பாதுகாக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.