சீனப் பெருஞ்சுவரில் ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம்; உற்சாகத்துடன் பங்கேற்ற நடிகர் ஜாக்கிசான்

Keerthi
2 years ago
சீனப் பெருஞ்சுவரில் ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம்; உற்சாகத்துடன் பங்கேற்ற நடிகர் ஜாக்கிசான்

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 4-ந்தேதி(நாளை) தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகின்றன. கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பெய்ஜிங்கில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதனை முன்னிட்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான இறுதி கவுண்ட்-டவுன் பாரம்பரிய தீப தொடர் ஓட்டத்துடன் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. கோடைக்கால அரண்மனை, சீனப் பெருஞ்சுவர் உள்ளிட்ட சீனாவின் முக்கிய அடையாளங்களைக் கடந்து இந்த தீபம் கொண்டு செல்லப்படுகிறது.

ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டத்தின் இரண்டாம் நாளான இன்று, நடிகர் ஜாக்கிசான் ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்தி சீனப் பெருஞ்சுவரில் தீப தொடர் ஓட்டத்தை தொடர்ந்தார். தற்போது 67 வயதான ஜாக்கிசான், ஒலிம்பிக் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஆவலுடன் காத்திருந்ததாகவும், இது தனது 4-வது ஒலிம்பிக்ஸ் என்றும் உற்சாகத்துடன் குறிப்பிட்டார். 

இதற்கிடையில் சீனாவில் அண்மைக் காலமாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஒலிம்பிக் தொடர்பான நிகழ்வுகளை மிகுந்த கட்டுப்பாடுகளோடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம், குறைந்த தூரத்தை மட்டுமே கடக்கும் வகையில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.