ஒமிக்ரான் பிஏ.2 என்றால் என்ன? - இந்த திரிபு பற்றி அறிய வேண்டிய முக்கிய விடயங்கள்!

#Omicron
Prasu
2 years ago
ஒமிக்ரான்  பிஏ.2 என்றால் என்ன? - இந்த திரிபு பற்றி அறிய வேண்டிய முக்கிய விடயங்கள்!

இப்போது உலகில் அதிகம் பரவக்கூடிய பாதி நோய்த்தொற்றுகளுக்கு ஒமிக்ரான் திரிபு முக்கிய காரணமாக உள்ளது. ஆனால், SARS-CoV-2 கொரோனா தொற்றுநோய்க்கு பல நெருங்கிய தொடர்புடைய வைரஸ் வகைகளுக்கு பொதுவான பதம் ஒமிக்ரான். இதில், பிஏ.1 அதிகம் பரவக்கூடியது.

இந்த நிலையில் இப்போது, பல நாடுகளில், குறிப்பாக ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நாடுகளில், பிஏ.2 திரிபு பாதிப்பு அதிகரிப்பதாக தெரியவருகிறது.

பி ஏ.2 திரிபு முந்தைய திரிபுகளை விட அதிகமாக பரவக்கூடியதாக தோன்றினாலும், அது இன்னும் தீவிரமானது என்று கூறுவதற்கு இதுவரை எந்தத் தரவுகளும் இல்லை.

இந்த வளர்ந்து வரும் திரிபு பற்றி நாம் எந்த அளவுக்கு கவலை கொள்ள வேண்டும்? அதைப் பற்றி நாம் அறிந்தவை இதோ.

பிஏ.2 என்றால் என்ன?

வைரஸ்கள் புதிய திரிபுகளாக மாறும்போது, அவை சில சமயங்களில் பிரியும்; அல்லது வைரஸ் வகையில் ஒரு உட்பிரிவாக பிரிகின்றன. உதாரணமாக, டெல்டா திரிபு, 200 வெவ்வேறு வைரஸ் திரிபுகளின் உட்பிரிவுகளை (sub-variants) கொண்டுள்ளது.

பிஏ.1, பிஏ.2, பிஏ.3 மற்றும் பி.1.1.529 ஆகிய துணை திரிபுகளை உள்ளடக்கிய ஒமிக்ரானிலும் இவ்வாறே உள்ளன.

பெரும்பாலான பாதிப்புகள் பிஏ.1 திரிபு வகையால் ஏற்படக்கூடியது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஜனவரி 25 ஆம் தேதி வரை உலகளாவிய கி.ஐ.எஸ்.ஏ.ஐ.டி (GISAID) தரவுத்தளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வைரஸ் டி.என்.ஏவில் கிட்டத்தட்ட 99% இந்த துணை திரிபு வகை என அடையாளம் காணப்பட்டது.

பி.ஏ.2 முதன்முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டறியப்பட்டது.

பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகியவை ஒரே மாதிரியாக இருந்தாலும், அவற்றின் 20 பிறழ்வுகள் வேறுபடுகின்றன.

பி ஏ.2 எங்கிருந்து உருவானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இது முதன்முதலில் இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டறியப்பட்டது.

பிஏ. 2 எங்கு பரவுகிறது?

இப்போது 57 நாடுகளில் ஒமிக்ரானின் துணை திரிபு வகை கண்டறியப்பட்டுள்ளது, என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சில நாடுகளில், வரிசைப்படுத்தப்பட்ட ஒமிக்ரான் பாதிப்புகளில் பாதிக்கும் மேலாக பிஏ.2 திரிபு வகை உள்ளது என்றும் இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சில இடங்களில், துணை திரிபு வகை பாதிப்பு ஏற்பட்டவர்களில், இது மிகவும் நுட்பமாக வளர்ந்துள்ளது.

டென்மார்க்கின் ஸ்டேட்டன்ஸ் சீரம் இன்ஸ்டிடியூட்டின் (எஸ்.எஸ்ஐ) தகவல்படி, ஜனவரி மாதத்தில் நாட்டில் பதிவான கோவிட் தொற்றுநோய் பாதிப்புகள் பாதிக்கு மேல் பிஏ.2 தொற்றுகளாக அதிகரித்துள்ளன.

ஒமிக்ரான் உண்மையில் ஒரு இயற்கையான தடுப்பு மருந்தா? உண்மை என்ன?

ஒமிக்ரான் திரிபு: காற்றில் பறக்க விடப்படுகிறதா கட்டுப்பாடுகள்? பிபிசி தமிழ் கள நிலவரம்

டெல்டா மற்றும் ஒமிக்ரான் பிஏ.1 திரிபு வகைகளை விட பிஏ.2 வேகமாக பரவிவருகிற மற்றொரு நாடு இந்தியா என்று மூலக்கூறு உயிரியலாளர் பிஜயா தாகல் கூறுகிறார்.

இது ஏற்கனவே பல மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் திரிபு வகையாக உள்ளது. மேலும், இது நாட்டின் சமீபத்திய மூன்றாவது அலை தொற்று பாதிப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.

ஜனவரி மாத இறுதியில் பெற்ற மாதிரிகளில் பிஏ.2 துணை வகை ஏற்கெனவே பரவலாக இருப்பதாக பிலிப்பைன்ஸ் நாட்டின் சுகாதாரத் துறை (DOH) கூறியுள்ளது.

பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு அமைப்பு (யு.கே.ஹெச். எஸ். ஏ - UKHSA) தகவலின்படி, பிரிட்டனில், பிஏ.2 வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 1,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது பிரிட்டிஷ் சுகாதார அதிகாரிகளால் 'பரிசோதனையின் கீழ் உள்ள திரிபு' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் அதை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். ஆனால் அதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை.

ஜெர்மனியில் பிஏ.1 மற்றும் டெல்டாவை விட பிஏ.2 தொற்று வேகமாக பரவி வருகிறது என்று யு.கே.ஹெச்.எஸ்.ஏவின் கோவிட்-19 பிரிவுக்கான இயக்குநர் டாக்டர் மீரா சந்த் கூறுகிறார்.

பி ஏ.2 அதிகம் பரவக்கூடியதா?

டென்மார்க்கின் எஸ்.எஸ்.ஏ என்ற அமைப்பு, 8,500 குடும்பங்கள் மற்றும் 18,000 தனி நபர்களிடம் நடத்திய ஆய்வில் பிஏ.2 துணை திரிபு , பிஏ.1 துணை திரிபுவை விட 'கணிசமான அளவில்' பரவக்கூடியது என்பதைக் கண்டறிந்துள்ளது.

மேலும், தடுப்பூசிகளிடமிருந்து தப்பும் திறன் கொண்டது என்பதற்கான ஆதாரங்களையும் பி.ஏ. 2 துணை வகை கொண்டது என்றும் இந்த ஆய்வு காட்டுகிறது.

இருப்பினும், தடுப்பூசி போடப்படாத நபர்களை விட தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும், அவர்கள் அதை மற்றவர்களுக்கு பரப்பும் வாய்ப்பும் குறைவு.

பிரிட்டன் நடத்திய ஒரு தனி ஆய்வில், பி.ஏ.1 உடன் ஒப்பிடும்போது பிஏ.2 வகை அதிகம் பரவும் தன்மை கொண்டதாக தெரிய வந்துள்ளது.

ஆனால், ஒரு முதல்கட்ட மதிப்பீட்டில், தடுப்பூசிகள் எந்த துணை வகையுள்ள நோய்க்கு எதிராக குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

பிஏ.2 மிகவும்ஆபத்தானதா?

முந்தைய ஒமிக்ரான் துணை திரிபுகளை விட பிஏ.2 மிகவும் கடுமையான நோய்க்கு வழிவகுக்கும் என்று கூறுவதற்கு தரவு எதுவும் இல்லை.

"பிஏ.2 இப்போது பரவிக்கொண்டிருக்கும் மற்ற நாடுகளை கவனிக்கும்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை விடவும் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிக பாதிப்புகளை பார்க்கவில்லை," என்று டபள்யூ.ஹெச்.ஒ அமைப்பின் டாக்டர் போரிஸ் பாவ்லின் கூறுகிறார்.

கம்ப்யூட்டேஷனல் சிஸ்டம்ஸ் பயாலஜியின் பேராசிரியரும், யூ.சி.எல் (UCL) மரபியல் நிறுவனத்தின் இயக்குநருமான ஃபிராங்கோயிஸ் பலூக்ஸ், பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகியவை "ஒமிக்ரானின் இரண்டு தொற்றுநோயியல் ரீதியாக சமமான துணை வகைகளாக கருதப்படலாம்" என்று கூறுகிறார்.

முந்தைய வகைகளைப் போலவே, கடுமையான நோய், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் தொடர்ந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.