அமெரிக்காவில் நர்சுகளுக்கு நிலவும் தட்டுப்பாடு பிற நாடுகளில் இருந்து நர்சுகளை அமெரிக்காவில் வேலைக்கு அமர்த்த முடிவு

Keerthi
2 years ago
அமெரிக்காவில் நர்சுகளுக்கு நிலவும் தட்டுப்பாடு பிற நாடுகளில் இருந்து நர்சுகளை அமெரிக்காவில் வேலைக்கு அமர்த்த முடிவு

உலகின் பிற எந்த நாட்டையும் விட கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சுகாதார கட்டமைப்புகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்பத்திரிகளில் நர்சுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு காரணம், கொரோனாவால் பல நர்சுகள் விருப்ப ஓய்வு பெற்று விட்டனர். பலர் விடுப்பிலும் சென்று விட்டனர்.

உதாரணத்துக்கு கலிபோர்னியா மாகாணத்தில் மட்டுமே தேவையைவிட 40 ஆயிரம் நர்சுகள் குறைவாக உள்ளனர். இதனால் நோயாளிகளின் பராமரிப்பு கேள்விக்குள்ளாகி உள்ளது. இதனால் சில ஆஸ்பத்திரிகள் பயணிக்கும் நர்சுகளை பணியமர்த்துகின்றனர்.

சில ஆஸ்பத்திரிகளில் பிலிப்பைன்ஸ், ஜமைக்கா மற்றும் ஆங்கிலம் பேசுகிற பிற நாடுகளில் இருந்து நர்சுகளை வரவழைக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டு நர்சுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக குடியேற்ற பிரச்சினைகளுக்கான வக்கீல் எர்ல்பேச்சர் ஆண்டர்சன் கூறுகிறார்.

இன்னொரு முக்கிய பிரச்சினை, உள்நாட்டு தேவையை நிறைவேற்றுகிற அளவில் அமெரிக்க நர்சிங் கல்லூரிகளில் இருந்து நர்சுகள் பட்டம் பெற்று வெளியே வருவதில்லை என்பதும் அங்கு பெரும் குறைபாடாக காணப்படுகிறது.

சட்டப்பூர்வ குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கால கொள்கைகளை தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம், தலை கீழாக மாற்றுகிறது.

வெளிநாட்டு சுகாதார பணியாளர்களுக்கு உதவ சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் கொரோனா கால தேவைகளை சமாளிக்கலாம் என எதிர்பார்க்கிறது.

ஆண்டு ஒன்றுக்கு அங்கு நிரந்தரமாக குடியேறுவதற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கிரீன்கார்டுகள் தரப்பட்டு வந்தன. சுகாதார பணியாளர்கள் தேவை அதிகரித்து வருகிற நிலையில் தற்போது அது 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்களுக்கான பணி பெர்மிட்டுகளும் விரைவாக புதுப்பிக்கப்படுகின்றன. நர்சுகளுக்கு அமெரிக்காவில் நல்ல வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.