தமிழ்நாட்டு மீனவர்களை தாக்குவோம் - கொந்தளிக்கும் யாழ். மீனவர்கள் - டக்ளஸ் தேவானந்தாவை முற்றுகையிட்டு வாக்குவாதம்

#SriLanka #Fisherman #strike
தமிழ்நாட்டு மீனவர்களை தாக்குவோம் - கொந்தளிக்கும் யாழ். மீனவர்கள் - டக்ளஸ் தேவானந்தாவை முற்றுகையிட்டு வாக்குவாதம்

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை தங்களுடைய கடற்படை தடுக்கத் தவறினால், அந்த மீனவர்களை நாங்களே தாக்குவோம் என்று இலங்கை யாழ்ப்பாணம் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர்களின் நிலைப்பாட்டை ஆமோதிக்கும் வகையில் இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஆனால், மீனவர்கள் கோரியபடி, அவர்களின் பிரச்னைக்கு எழுத்துபூர்வ உத்தரவாதத்தை தர அமைச்சர் மறுத்ததால் அவர் மீது யாழ்ப்பாணம் மீனவர்கள் அதிருப்தியுடன் காணப்படுகின்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன்பிடிக்கும்போது பிடிபட்டதாகக் கூறி கைதாகி பின்னர் விடுவிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதுபோல, சமீபத்திலும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. இதேவேளை, இரண்டு இலங்கை மீனவர்களும் சமீபத்தில் நடுக்கடலில் தாக்கப்பட்டு பின்னர் இறந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் இந்திய மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கையை தடுக்கக் கோரி தமிழ்நாட்டு மீனவர்களும், அவர்களின் கடல் ஊடுருவலை தடுக்கக் கோரி இலங்கை மீனவர்களும் தங்களுடைய மண்ணில் இருந்தபடி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டம் சுப்பர்மடம் கடற்பகுதியிலிருந்து கடந்த வாரம் வியாழக்கிழமை ஒரு ஃபைபர் படகில் தணிகைமாறன், பிரேம்குமார் என்ற இரண்டு இலங்கை மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

மறுநாள் வெள்ளிக்கிழமை கரை திரும்ப வேண்டிய இரண்டு மீனவர்களும் வரவில்லை. இதையடுத்து சுப்பர்மடம் கடற்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், மாயமான இரண்டு மீனவர்களையும் தேடினர். அப்போது இரண்டு மீனவர்களும் பயன்படுத்திய வலைகள் சேதப்படுத்திய நிலையில் நடுக்கடலில் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டு மீனவர்களின் உடல்கள் திங்கட்கிழமை அடுத்தடுத்து வடமராய்ச்சி கடற்பகுதியில் ஒதுங்கியது.

அந்த மீனவர்கள் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களாலேயே நடுக்கடலில் வைத்து தாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டி இலங்கை யாழ்ப்பாணம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.