வீதியில் இறங்க தடை விதித்ததால் கடலில் இறங்கி போராடும் மீனவர்கள்

#SriLanka
Nila
2 years ago
வீதியில் இறங்க தடை விதித்ததால் கடலில் இறங்கி போராடும் மீனவர்கள்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்களின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் 5ஆவது நாளாக இன்றைய தினமும் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றைய போராட்டத்தின் போது, வடமராட்சி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

மீனவர்கள் கடந்த 31ஆம் திகதி முதல் பருத்தித்துறை – பொன்னாலை வீதியினை வழி மறித்து நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளமை, பொதுமக்களின் இயல்பு வாழ்வுக்கு இடையூறு விளைவித்தல், கொரோனா அபாயம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பருத்தித்துறை பொலிஸார், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் போராட்டத்திற்கு எதிராக தடையுத்தரவை பெற்றிருந்தனர்.


நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து நேற்றைய தினம் இரவு மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தினை கைவிட்டனர்.

எவ்வாறாயினும், வீதியில் இறங்கி போராடுவதற்கு தடை விதிக்கப்பட்ட பின்னணியில், தற்போது மெழுகுவர்த்திகளை ஏந்தி , கறுப்பு கொடிகளுடன் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.