186 கிலோ தங்க கட்டியை பார்வையிட பூங்காவுக்கு அலை மோதும் மக்கள். அது எங்கே உள்ளது தெரியுமா?

Keerthi
2 years ago
186 கிலோ தங்க கட்டியை பார்வையிட பூங்காவுக்கு அலை மோதும் மக்கள். அது எங்கே உள்ளது தெரியுமா?

அமெரிக்காவில் உள்ள பூங்கா ஒன்றில் 186 கிலோ எடையுள்ள தூய தங்கக் கட்டி ஒரு கலைப்பொருளாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் பெரும்பாலான மக்கள் சொந்தமாக சில கிராம்களில் தங்கத்தை வாங்குவதற்கே பெரும்பாடுபடுகின்றனர்.

இப்படி இருக்கும் நிலையில், பெரும் பணக்காரர்களே வாயை பிளக்கும் அளவிற்கு, அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

புதிதாக அறிமுகமாகும் ஒரு Cryptocurrency-க்கு விளம்பரம் செய்வதற்காக, 186 கிலோகிராம் (410 பவுண்டுகள்) எடையில் 24 கேரட் சுத்தமான தங்கத்தை ஒரு கன சதுரமாக (Cube) வடிவமைத்து, நியூயார்க் நகரத்தில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் நடுவில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதனை செய்ய, ஒரு அவுன்ஸ் தங்கம் 1,788 டொலருக்கு வாங்கப்பட்டது என்றும் முழு கலைப்படைப்பின் மதிப்பு 11.7 மில்லியன் அமெரிக்க டொலர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த கன சதுரத்தை, ஜேர்மனியைச் சேர்ந்த நிக்லாஸ் காஸ்டெல்லோ (Niclas Castello) எனும் 43 வயது கலைஞர் ஒரு கலைப்பொருளாக வடிமமைத்துள்ளார்.

186 கிலோ தங்கத்தை இந்த வடிவத்தில் செய்ய அவருக்கு ஒரு சிறப்பு சூளை தேவைப்பட்டுள்ளது. மேலும், இதை உருவாக்க 4,500 மணி நேரத்திற்கும் மேலாக எடுத்ததாக கூறப்படுகிறது.

'காஸ்டெல்லோ காயின்' (Castello Coin) எனும் ஒரு புதிய கிரிப்டோகாயின் மீது கவனத்தை ஈர்ப்பதற்காக அதை ஒரு விளம்பர ஸ்டண்டாக சென்ட்ரல் பூங்காவின் நடுவில் வைக்கப்பட்டுள்ளது.

"மனிதகுல வரலாற்றில் இதற்கு முன் இவ்வளவு பெரிய அளவிலான தங்கம் ஒரு தூய பொருளாக வார்க்கப்பட்டதில்லை. தங்கம் - நித்திய உலோகம். சூரியனின் சின்னம், ஒளி, நன்மை," என்று கலைஞர் நிக்லாஸ் காஸ்டெல்லோ தனது கலைப்படைப்பு பற்றி விளக்கினார்.

பூங்காவில் இந்த தங்கக்கட்டியை பாதுக்காக்க ஒரு சிறப்பு பாதுகாப்பு குழுவே நியமிக்கப்பட்டுள்ளது.