கச்சத்தீவு திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Mayoorikka
2 years ago
கச்சத்தீவு திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் – தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து, தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் தமிழக மீனவர்களும் பங்கேற்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கச்சத்தீவில் இடம்பெறும் திருவிழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பான பயணத்தை மாநில அரசாங்கம் இலகுவாக்கியுள்ளது.

ஆனால் இந்த ஆண்டு பல்வேறு காரணங்களை கூறி தமிழகத்தை சேர்ந்த அடியார்களுக்கு இலங்கை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்வு ரீதியான தொடர்பைக் கொண்டுள்ளனர்,

மேலும் பல தசாப்தங்களாக இந்த பாரம்பரிய நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர்.

இந்தநிலையில் இலங்கை அதிகாரிகளின் செயற்பாடு, மீனவர் சமூகத்தினரிடையே ஆழ்ந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாண அரசாங்க அதிபரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கச்சத்தீவு திருவிழாவில் இலங்கை அடியார்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.