எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்... அதுபாட்டுக்கு வந்து போகட்டும்!

Prathees
2 years ago
எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்... அதுபாட்டுக்கு வந்து போகட்டும்!

எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்... அதுபாட்டுக்கு வந்து போகட்டும்!’ - என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள் ஜென் குருமார்கள். இதில் சூசகமான ஒரு தத்துவம் உண்டு. வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிடுதல்; இயல்பாக இருத்தல் என்கிற தத்துவம்.

இருந்தாலும், `நமக்கு அவசியம் இல்லாதவற்றை வாழ்க்கைக்குள் அனுமதிக்காதே!’ என்றும் சொல்கிறது ஜென். துறவி வூ லீ (Wu Li) ஒருபடி மேலே போய், ``நீங்கள் ஞானம் பெறுவதற்கு முன்னர் ஒரு மரத்தை வெட்டி, ஒரு செடிக்கு நீர் வார்த்தீர்களா? சரி... இப்போது என்ன ஞானம் பெற்றுவிட்டீர்களா? ஒரு மரத்தை வெட்டுங்கள்; ஒரு செடிக்கு நீர் ஊற்றுங்கள்!’ என்கிறார். அதாவது என்ன பெற்றாலும், `நீ நீயாக இரு!’ என்பதே இதன் பொருள். 

அவன் ஒரு தொழிலாளி; கல் உடைப்பது தொழில். இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஒரே மாதிரியான வேலை; அதிகம் உயராத சம்பளம்; வீட்டில் மனைவி, குழந்தைகள், வயதான பெற்றோர், பிக்கல், பிடுங்கல், வறுமை..! ஒருகட்டத்தில் அவன் அயர்ந்து போனான். அவனுக்குத் தன் மீதும், தான் வாழும் வாழ்க்கை மீதும் வெறுப்பு வந்தது. இப்படியே கழிந்துவிடுமா வாழ்க்கை என்கிற வெறுமை அவனைப் பிடித்து ஆட்டியது. 

ஒருநாள் வழக்கம்போல அவன் வேலைக்குப்போய்க்கொண்டிருந்தான்.தோளில்தொங்கிக்கொண்டிருந்த பையில் கல்லை உடைக்கும் ஆயுதங்கள் கனத்துக்கிடந்தன... அவன் இதயத்தைப் போலவே! கூவிக் கூவி மீன்களையும் முட்டைகளையும்விற்றுக்கொண்டுபோன தெரு வியாபாரிகள்... வானில் எழுந்து வெயிலை உடலில் வெப்பமாக இறக்கிக்கொண்டிருந்த சூரியன்... கிளைவிட்டு கிளைதாவிப் போய்க்கொண்டிருந்த குரங்குகள்... சாலையின் குறுக்கும் நெடுக்குமாக ஓடி விளையாடிய சிறுவர்கள்... எதுவும் அவனுக்கு உறைக்கவில்லை.நடந்துகொண்டே இருந்தான். அது வழக்கமாக அவன் நடக்கும் பாதைதான். ஓர் இடத்தில் அவனை அறியாமல் அவன் பார்வை திரும்பியது. 

அது ஒரு வணிகரின் வீடு. அன்றைக்கு என்னவோ அந்த வீட்டை அப்போதுதான் புதிதாகப் பார்ப்பதுபோல அவனுக்கு இருந்தது. அந்த வணிகர், பல வெளிநாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்பவர். செல்வம் அவர் வீட்டு வெளிக்கதவில் இருந்து, வீட்டுக்கூரை வரை தன் செழிப்பைப் பதித்திருந்தது. பார்த்தாலே பிரமிக்கவைக்கும் பிரமாண்ட மாளிகை. ஏவலுக்கு ஓடி வரும் பணியாட்கள்.

அவரைப் பார்க்க சதா காத்திருக்கும் ஊர்ப் பெரிய மனிதர்கள், செல்வந்தர்கள். இன்றைக்கும் அவரைப் பார்ப்பதற்காக ஒரு கூட்டம் காத்திருந்தது. அவன் பெருமூச்சுவிட்டான். `சே! நானும் இவரைப்போல் ஒரு வணிகராக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று நினைத்தான். 

அவ்வளவுதான். அந்த மாயாஜாலம் நிகழ்ந்தது. அவன் மிகப் பெரும் வணிகனாக உருமாறிவிட்டான். செல்வம், செழிப்பு, வேலையாட்கள் எதற்கும் குறைவு இல்லை. ஆனால், முக்கியமான ஒன்று அவனிடம் இப்போது இல்லை. அது, நிம்மதி. அவனைவிட வசதி குறைந்தவர்களின் பொறாமையையும் பகைமையையும் அவன் சம்பாதிக்கவேண்டி இருந்தது. ஒருநாள் அவன் மாளிகை மாடத்தில் இருந்து தெருவையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சாலையில் அரவம். இவன் என்னவென்று எட்டிப் பார்த்தான். 
மணியோசையும் எக்காளமும் முழங்க ஓர் ஊர்வலம். முன்னும் பின்னும் ஊழியர்கள், பாதுகாப்புக்குக் காவலர்கள், நடுவில் ஒரு பல்லக்கில் ஒய்யாரமாக அமர்ந்தபடி அரசின் உயர் அதிகாரி ஒருவர் போய்க்கொண்டிருந்தார். சாலையில் இருந்தவர்கள் ஊர்வலத்துக்கு மரியாதையோடு வழிவிட்டு ஒதுங்கி நின்றார்கள். அந்த அதிகாரியை எல்லோரும் சிரம் தாழ்த்தி வணங்கினார்கள்... ஏழை, செல்வந்தன், வணிகன், எல்லோரும். இதைப் பார்த்த அவன் பெருமூச்சுவிட்டான். `நானும் இவரைப்போல ஓர் உயர் அதிகாரியாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என நினைத்தான். 

அவ்வளவுதான். அந்த அற்புதம் நடந்தது. அவன் ஓர் உயர் அதிகாரி ஆகிவிட்டான். போகிற இடத்தில் எல்லாம் அவனுக்கு மரியாதை கிடைத்தது. பாதுகாவலுக்கு ஆள் படை. ஆனாலும் அவனுக்கு இன்னமும் திருப்தி இல்லை. ஒருநாள் பல்லக்கில் அடுத்த ஊருக்குப் போய்விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தான். அது வெயில் காலம். சுட்டெரித்தது அனல். போதாக்குறைக்கு காற்று வேறு. பல்லக்குத் தூக்கிகள் வேகமாகப் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு போய்க்கொண்டிருந்தாலும், அவனால் உள்ளே அமர முடியவில்லை.

வெப்பம் தாங்காமல் தலையை வெளியே நீட்டி அண்ணாந்து பார்த்தான். வானில் தெரிந்த சூரியன் இவனைப் பார்த்து சிரிப்பதுபோல் இருந்தது. `நான் மட்டும் சூரியனாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என நினைத்தான். 

அவ்வளவுதான். இப்போதும் அதிசயம் நிகழ்ந்தது. அவன் சூரியனாக உருமாறிவிட்டான். வானில் சுதந்திரமாக வலம் வந்தான். கிழக்கே உதித்து, மேற்கில் மறையும் வரை உலகை உயரே இருந்து பார்ப்பது ஆனந்தமாகத்தான் இருந்தது. ஆனால்..? தகிக்கும் இவனுடைய வெப்பத்தில் சிக்கியவர்கள் இவனைக் கண்டபடி திட்டினார்கள். விவசாயிகள் சாபம் கொடுத்தார்கள். பகலில் வேலை பார்த்த தொழிலாளர்கள் கரித்துக்கொட்டினார்கள். இவனுக்கும் பூமிக்கும் இடையே சில நேரங்களில் கருமேகங்கள் திரண்டன.

அவை, இவனுடைய வெப்பத்தை பூமிக்கு அனுப்பாமல் தடுத்தன. `அட... இந்தக் கருமேகங்களுக்கு இவ்வளவு சக்தியா? நானும் கருமேகமாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என நினைத்தான் அவன். 

இப்போது அவன் கருமேகமாக உருமாறியிருந்தான். இஷ்டப்பட்டால் மென்மையான மழையைப் பொழிவான். கொஞ்சம் கடுப்பேறியது என்றால் மழையைப் பொழிந்து தள்ளி, கிராமங்களையும் வயல்வெளிகளையும் வெள்ளக்காடாக மாற்றுவான். இவனைப் பார்த்து மனிதர்கள் அச்சப்படுவது இவனுக்கு பிடித்தமான பொழுதுபோக்காக இருந்தது.

ஆனாலும், இவனுக்குள் ஓர் உணர்வு. இவனை யாரோ பிடித்து தள்ளுவது போன்ற உணர்வு. அது யார் என்பதையும் அவன் தெரிந்துகொண்டான். அது, காற்று! `இந்தக் காற்றுக்கு என்னையே பிடித்துத் தள்ளும் அளவுக்கு சக்தியா? நான் ஒரு காற்றாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ நினைத்தான். காற்றாகவே மாறிப் போனான். 

காற்றா அவன்? தென்றலாகவும் வீசுவான்; நினைத்தால் சூறாவளியாகவும் மாறுவான். அவனுக்கென்னவோ சூறாவளியாக இருப்பதுதான் பிடித்திருந்தது. வீட்டுக் கூரைகளைப் பிய்த்து எறிவது; மரங்களைச் சாய்பது, ஆடுகளையும் மாடுகளையும்... ஏன் மனிதர்களையுமே நடுநடுங்க வைப்பது அவனுக்கு தினசரி பொழுதுபோக்காக ஆனது.

அவன் மாபெரும் சக்தி படைத்தவனாகத் தன்னை எண்ணி இறுமாந்து போனான். காற்றாக அவன் அலைந்துகொண்டிருந்தபோது ஓர் இடத்தில் அதைக் கண்டான். மலை, சற்று உயரமான மலை. பெரும் சூறாவளியாக மாறி அதை நோக்கிப் போனான். அவனால், அதை ஒன்றும் செய்ய முடியவில்லை.

வலுவையெல்லாம் கூட்டி மோதிப் பார்த்தும்... ம்ஹூம்... அதை துளிகூட அசைக்க முடியவில்லை. `என்னைவிட வலுவானதா இந்த மலை? நான் இப்படி ஒரு மலையாக மாறினால் எப்படி இருக்கும்!’ அவன் நினைத்தான். மலையாக மாறினான். 

உயர்ந்து நிற்பது அவனுக்குப் பிடித்திருந்தது. தன்னைவிட வலுவானது உலகில் வேறு எதுவும் இல்லை என்கிறே நினைப்பே மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது அவனின் கால்களுக்குக் கீழே ஏதோ குடைச்சல். `டொக்... டொக்... டொக்...’ என சத்தம். யாரோ அவன் கால் விரலைக் குத்திக் கிழிக்கிறார்கள்;

துளையிடுகிறார்கள்... இன்னும் கொஞ்ச நேரத்தில் அவனுடைய ஒரு விரலைக்கூட வெட்டி எடுத்தாலும் எடுத்துவிடலாம். அவன் பயத்தோடு யார் என்று குனிந்து பார்த்தான். கல் உடைக்கும் தொழிலாளியின் கை ஒன்று ஓர் உளியை மலை அடிவாரத்தில் பதித்து, ஓங்கி ஓங்கி சுத்தியலால் வெட்டிக்கொண்டிருந்தது.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!