வடகொரியா சைபர் தாக்குதல் நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை திருடி ஏவுகணை மற்றும் அணுஆயுத திட்டத்தை செயல்படுத்தி வருவதாக ஐ.நா. குற்றச்சாட்டு

Keerthi
2 years ago
வடகொரியா சைபர் தாக்குதல் நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை திருடி ஏவுகணை மற்றும் அணுஆயுத திட்டத்தை செயல்படுத்தி வருவதாக ஐ.நா. குற்றச்சாட்டு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வடகொரியா 7 முறை ஏவுகணை சோதனையை நடத்தி அதிரவைத்தது.

சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளின் எதிரொலியால் வடகொரியாவின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளபோதும் அந்த நாடு ஏவுகணை சோதனையில் கவனம் செலுத்துவது வியப்பாகவே உள்ளது.

இந்த நிலையில் வடகொரியா பல நாடுகளின் நிதிநிறுவனங்கள், கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை திருடி அதை கொண்டு ஏவுகணை மற்றும் அணுஆயுத திட்டத்தை செயல்படுத்தி வருவதாக ஐ.நா. கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் “வடகொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள் 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த ஆண்டு நடுப்பகுதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 3 கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனங்களில் இருந்து 50 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.373 கோடி) வரை திருடியுள்ளனர். வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் நிதி நிறுவனங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனங்கள் வடகொரியாவில் குறிவைக்கப்படுகின்றன” என கூறப்பட்டுள்ளது.