பொருளாதார தடை விதிப்பு தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் காரசாரமாக மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

#world_news #United_States #Russia
பொருளாதார தடை விதிப்பு தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் காரசாரமாக மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. ரஷ்யா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், நாடுகள் மீதான பொருளாதார தடையால் ஏற்படும் பயன்கள் மற்றும் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது ஐ.நா.,வுக்கான ரஷ்ய துணை துாதர் டிமிட்சி போலியன்ஸ்கி பேசியதாவது:ஐ.நா., 14 நாடுகள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் இந்நாடுகளின் வளர்ச்சி பாதிக்கப் பட்டு உள்ளது.தடை விதிப்பதற்கு முன், மக்களின் நலன் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஐ.நா., மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளும் பொருளாதார தடை விதிப்பதால், பாதிப்பு அதிகம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை மறுத்து ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்டு பேசியதாவது: பொருளாதார தடையால், பயங்கரவாதிகள் நிதி திரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வட கொரியாவின் அணு ஆயுத திட்டச் செயல்பாடுகள் சுணக்கம் அடைந்து உள்ளன.தடைப் பட்டியலில் உள்ள நாடுகள் ஜனநாயக பாதைக்கு திரும்பி வருகின்றன.

எனவே பொருளாதார தடையால் பயன்கள் தான் அதிகம் உள்ளன. ரஷ்யாவின் கருத்தை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். பொருளாதார தடை தொடர்பாக ரஷ்யாவும், அமெரிக்காவும் மோதிக் கொண்டது ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.