பெரும் சர்ச்சைக்குள்ளாகி, தடையும் விதிக்கப்பட்டுள்ள “Convoi de la liberté" ஆர்ப்பாட்டம் ஏன் இடம்பெறுகின்றது?

#Protest
Prasu
2 years ago
பெரும் சர்ச்சைக்குள்ளாகி, தடையும் விதிக்கப்பட்டுள்ள “Convoi de la liberté" ஆர்ப்பாட்டம் ஏன் இடம்பெறுகின்றது?

அண்மையில் கனடாவில் ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. வீதிகளில் தங்களது வாகனங்களுடன் இறங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அதை மிக மெதுவாக செலுத்தி, வீதிகளை முடக்கியிருந்தனர். இரண்டு மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினால் கனேடிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். அந்நாட்டு அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை அந்த ஆர்ப்பாட்டத்தினால் ஏற்படுத்த முடிந்தது.

அந்த ஆர்ப்பாட்டத்தை தூண்டுகோலாக கொண்டு, பிரான்சில் ‘Convoi de la liberté’ எனும் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. Convoy France எனும் ஒரு குழு டெலிகிராம் செயலி ஊடாக உருவாக்கப்பட, அது மிக விரைவாக மக்களிடையே பரவியது. அதன்பின்னரே பெரும் ஆர்ப்பாட்டமாக மாற்ற தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், முதலாவது முயற்சியிலேயே அரசு அதற்கு அனுமதி மறுத்துள்ளது. பரிஸ் காவல்துறை தலைமையகம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதித்ததோடு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் €4,500 யூரோக்கள் குற்றப்பணம், இரண்டு ஆண்டுகள் சிறை என எச்சரிக்கையும் விடுத்தது.

நோக்கம்?

ஆர்ப்பாட்டத்துக்கு உடனடியாக தடை விதித்ததோடு, பிரதமரும், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனும் கூட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வைக்கும் கோரிக்கையும் மிக ஆபத்தானது. பிரான்சில் கடந்த இரண்டாண்டுகளாக உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அதே சலுகைகள், தடுப்பூசி போடாதவர்களுக்கும் வழங்கவேண்டும் எனவும், தடுப்பூசி அட்டை (pass vaccinal) முறைமையை இல்லாதொழிக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

‘மக்களை இதுபோன்ற ஒரு அடையாளத்தின் மூலம் வகைப்படுத்துவதற்கு முன்னர், அது தொடர்பாக மக்களுடன் கலந்தாலோசிக்கவேண்டும்!’ எனவும் ‘Convoi de la liberté’ ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டத்துக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. ‘அவர்களின் கோபத்தை என்னால் உணர முடிகிறது. ஆனால் நாம் இந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் சோர்வடைந்துள்ளோம்.’ என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.