சமூக ஆர்வலர் ஷெஹான் மாலக சிஐடியினரால் கைது

Prathees
2 years ago
சமூக ஆர்வலர் ஷெஹான் மாலக சிஐடியினரால் கைது

சமூக ஆர்வலர் ஷெஹான் மாலக கமகே குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரமவின் கொழும்பு புறநகரில் உள்ள வீட்டின் மீது திங்கட்கிழமை (14) ஆயுதமேந்திய இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் காரணமாக கமகே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

“இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கமகே சிஐடியால் கைது செய்யப்பட்டார்.

அவர் தனக்குத் தெரியாது என்று கூறுகிறார், ஆனால் அவருக்கு நன்றாகத் தெரியும், ”என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதற்கிடையில், கமகே தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் நேரடி வீடியோவில், 
ஒரு வெள்ளை வேன் வந்ததாகவும், பொலிஸ் தரப்பில் இருந்து வந்ததாக கூறி 5 பேர் வேனில் இருந்து இறங்கி தன்னை  கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

“நான் ஏன் கைது செய்யப்பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. 5 பேர் வெள்ளை வேனில் வந்தவர்கள், இப்போது என்னை அழைத்துச் செல்கிறார்கள், நான் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன், நான் பயப்படவில்லை. நான் சட்டத்தை மதிக்கிறேன், என்னுடைய தவறு ஏதேனும் இருப்பின் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன், ”என்று கமகே தனது தொலைபேசியை அதிகாரிகளால் பறிமுதல் செய்வதற்கு முன்பு கூறினார்.