IND vs WI - முதல் T20 போட்டியில் இந்தியாவுக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஓவரிலேயே தனது துவக்க வீரர் பிராண்டன் கிங்கை இழந்தது. 5 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 ரன் எடுத்த நிலையில், புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கெயில் மேயர்ஸ், நிகோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மேயர்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர். மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோலஸ் பூரன் அரை சதம் கடந்தார். அவர் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹர்ஷல் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார்.
கடைசி நேரத்தில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் கிரன் பொல்லார்ட் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது. இந்தியா தரப்பில் அறிமுக வீரர் ரவி பிஷ்னோய், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.