இன்றைய வேத வசனம் 17.02.2022 எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்;
அநேக நேரம் வாலிபர்கள் “நான் ஆண்டவரை துக்கப்படுத்தி விடுகிறேன். அநேக நேரம் என் பரிசுத்தம் பத்து நாள் தான் நீடிக்குது” என்று மனம் உடைந்து சொல்லுவார்கள்.
அதன் பின்னர் நான் ஒரு பாவி, என்னால் ஆண்டவரை சந்தோஷப்படுத்த முடியாது, ஆவியானவருக்கு செவிசாய்த்து கீழ்ப்படிய முடியாது, பரிசுத்தத்தில் இரண்டு படி ஏறினா ஐந்து படி சறுக்குது என்று தங்கள் சோகக் கதையை சொல்லுவார்கள்.
ஆனால் தங்களுடைய சரிவுக்குக் காரணத்தைக் கண்டறிந்து அதை சரிசெய்ய தவறும் வாலிபர் அநேகர். இன்றைய வாலிபர்களை பாவத்தின் குழியில் தள்ளி, அவர்களை எழும்ப விடாமல் பாவத்தின் சங்கிலியால் கட்டி, அவர்களை செயல் படவிடாமல் முடக்குகின்ற பிசாசின் தந்திரங்களை வாலிபர்கள் உணரத்தவறுகிறார்கள்.
நீ பரிசுத்தமாய் வாழும்போது அதைக்கண்டு மகிழும் என் ஆண்டவர், நீ இச்சையில் சறுக்கி பாவத்தில் விழும்போது துக்கப்படுகிறார்.
ஆண்டவரை வேதனைப்படுத்தவே பிசாசு உன்னை அனுதினமும் பாவத்தில் சிக்கவைத்து, எழும்ப முடியாத அளவிற்கு உன்னை முடக்கி விடுகிறான். ஆவியானவரை துக்கப்படுத்தவே பிசாசு உன்னை திட்டமிட்டு வீழ்த்துகிறான்.
ஒருமுறை சறுக்கினால் அதுவே உன்முடிவு என்று எழும்ப மறுப்பது உன்னுடைய தவறு. நீதிமான் ஏழு தரம் விழுந்தாலும், திரும்பவும் எழுந்திருப்பான். (நீதி 24:16.)
எத்தனை முறை விழுகிறாய் என்று பார்க்காமல் எங்கு, எப்படி விழுந்தாய் என்று உணர்ந்து, அந்த பாதையில் இனி ஆவியானவரின் துணையில்லாமல் செல்லாதே, ஆவியானவர் தடுத்தால் அந்த பாதைக்கே போகாதே.
இப்படி ஒவ்வொரு நாளும் ஆவியானவருக்கு நீ செவிகொடுக்கும் போது சிம்சோனைப் போன்று சறுக்காமல் செல்லலாம். அவன் வாழ்க்கையில் ஆவியானவர் அவனை பலமுறை ஆட்கொண்டு நிரப்பி பயன்படுத்தினார். ஆவியானவர் அவனை பெலப்படுத்தும்போதும், நிரப்பும் போதும் அவன் செய்த காரியங்கள் பராக்கிரமமான செயல்கள்.
ஆனால், தான் ஆவியானவரை துக்கப்படுத்துகிறோமே என்று யோசிக்க, நிதானிக்க, தன்னையே பரிசோதிக்க சிம்சோன் தவறிவிட்டான்.
மேலும் சாதாரண வாலிபனான சவுலை தேவன் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார். ஆனால் அவன் கீழ்ப்படிய தவறியதால் ராஜ்ஜியத்தை மட்டுமல்ல, ஆவியானவரின் பிரசன்னத்தையும் இழந்து பரிதாபமாக வாழ்க்கையை முடித்தான்.
இன்றைக்கு நீ யோசேப்பு மற்றும் யோபுவைப் போன்று அவரோடு இணைந்து வாழ்ந்தால் பரிசுத்தத்தில் வெற்றி மட்டும் அல்ல, பலருக்கு ஆசீர்வாதமான வாலிபனாய் திகழ ஆவியானவரின் பிரசன்னம் தேவை.
யோபுவைப் போன்று வார்த்தையிலும், வாழ்க்கையிலும் அவரை சந்தோஷப்படுத்தி, சாத்தானுக்கு சவால்விடும் ஒரு வாலிபனாக எழும்பலாமே!
இதுவரை வீழ்ந்தது நீயாக இருக்கலாம்! இனி எழுவது ஆவியானவரின் பெலத்தில். ஆவியானவர் எங்கு உண்டோ அங்கே விடுதலை உண்டு என்பதை நீ உணர்ந்தால், ஆவியானவரை ஒருபோதும் விட்டு விடமாட்டாய்!
உன்னோடு ஒவ்வொரு நாளும் உண்மையை உரக்கச் சொல்லும் உன்னத தேவ சத்தத்துக்கு நீ கீழ்ப்படியும்போது உன் ஓட்டத்தில் தொய்வும் இல்லை, பாவத்தின் பக்கம் சாய்வும் இல்லை.
வாலிபனே! நீ அடிமை அல்ல, ஆவியானவர் அனல்மூட்டும் ஒரு அக்கினி, நீ அணைவதில்லை, அநேகரை அனலாக்கத் தெரிந்து கொள்ளப்பட்டவன் ஆவியானவரில் பெலப்படு, பிறகு புறப்படு.
நீ எழும்ப வேண்டிய எழுப்புதல் தீ! எவரும் உன்னை எளிதில் அணைக்க முடியாது! எழும்பு வாலிபனே, உன் தேவனை சந்தோஷப்படுத்த எழும்பு !!!
ஏசாயா 52:1
எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்;