ஆஞ்சனேயருக்கு எதற்காக இச்சிறப்புக்கள்? யார் இந்த ஆஞ்சனேயர்? அவரது அற்புதம்தான் என்ன?
இந்து சமயத்திலும், சைவ சமயத்திலும் பல தெய்வ வழிபாடுகள் இருப்பினும் பிள்ளையாருக்கு அடுத்ததாக சிவன், விஷ்ணு, அம்பாள் வரிசையில் பல ஆலயங்களைக் கொண்டவராக ஆஞ்சநேயர் திகழ்கிறார்.மற்ற எந்த தெய்வங்களுக்கும் இல்லாத சிறப்பு பிள்ளையாருக்கு அடுத்ததாக அனுமனுக்கு உண்டு.
இறைவனின் பக்தனான ஒருவரையும், அதிகமான மக்கள் பக்தியுடன் வழிபடுகிறார்கள், ஆலயங்கள் அமைத்திருக்கிறார்கள், அதுவும் ராமரின் அருளைப் பெற இவரையே வணங்க வேண்டும் என்பது போன்றவையே இவரை தனிச் சிறப்புடன் காட்டுகிறது.
அனுமனின் அவதாரம், மும்மூர்த்திகளில் முதன்மையானவரான சிவபெருமானுடனும், பல அவதாரங்கள் எடுத்த விஷ்ணுவுடனும் சம்பந்தப்பட்டுள்ளது.
அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது எழுந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானின் விஸ்வரூப தரிசனம் நிகழ்ந்த அதே வேளையில், மகாவிஷ்ணுவின் கூர்ம அவதாரமும் நிகழ்ந்தது.
பூமிக்கடியில் அசுரர்களால் மறைத்து வைக்கப்பட்ட நான்கு வேதங்களையும் மீட்கும் பொருட்டு நிகழ்ந்த இந்த கூர்ம அவதாரத்தில் பூமியைத் தோண்டியபடி வேகமாக செல்ல, திடீரென்று தட்டுப்பட்ட சிவபெருமானின் பாதங்களைத் தொட்டு மீண்டது விஷ்ணுவின் கரங்கள்.
உடனே சிவபெருமான் தன் விஸ்வரூபத்தைச் சுருக்கி, “நாம் இருவருமே தெய்வ நிலையில் இருக்கிறோம். அப்படியிருக்க உன் கரங்கள் என் பாதங்களை ஸ்பரிசம் செய்வதா? அறியாமல் செய்தது என்றாலும், முறையாதனல்ல. இதற்கு நானும் ஏதேனும் உனக்கு உபகாரமாக இருக்க வழி செய்ய வேண்டும்” என்றார்.
சிவபெருமானின் கோரிக்கையை தட்ட முடியாத நாராயணன், “என் அவதாரங்களுள் மிக பெருமை வாய்ந்த ராம அவதாரத்தின் போது, எதிரிகளை வெல்ல அசகாய பலம் படைத்த வீரனாய், எனக்கு தாங்கள் உதவ வேண்டும் ஈஸ்வரனே” என்றார்.
அந்த ஒப்பந்தத்தின் படிதான், சிவனை நினைத்து காற்றை மட்டும் சுவாசித்து கடுந்தவம் புரிந்த அஞ்சனைக்கு, வாயுவின் அருளால் சிவசக்தி அம்சம் கொண்ட கனி கிடைத்தது.அதை உண்ட அஞ்சனை சிவனின் சக்தியைக் கொண்ட பராக்ரமசாலியான ஆஞ்சநேயர் பிறந்தார் என்கிறது புராணம்.
அனுமன் அவதரித்தது மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் என்பதால், அந்த நாள் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.அன்றைய தினம் விரதம் இருந்து அனுமனுக்கு விருப்பமான ராம நாமத்தை ஜெபித்து விட்டு, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது சிறப்பு தரும்.
‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்தோ ஹனுமன் பிரசோதயாத்’
இந்த அனுமன் காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து அனுமனை வழிபடுபவர்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவார்கள்.