இன்றைய வேத வசனம் 19.02.2022: அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்
கஷ்டங்களும், பாடுகளும் நம்மை நெருங்கும் போது தேவனுடைய உதவியை தேடி ஓடுகிறோம். அதிகமான ஜெபமும், உபவாசம் தேவனுடைய இரக்கத்தை கொண்டு வரும் என்று நாம் நம்புகிறோம்.
உண்மைதான்! ஜெபம் மற்றும் உபவாசத்தின் விளைவுகள் அசாதாரணமானது தான். ஆனாலும், ஜெபத்தாலும் உபவாசத்தாலும் மட்டுமே தேவனுடைய உதவி வந்துவிடும் என்று சொல்ல முடியாது.
வேதத்தை நன்கு கவனிக்கும்போது இந்த உண்மை விளங்கும். இஸ்ரவேல் ஜனங்கள் உபத்திரவங்களின் நடுவில் அதிகமாக ஜெபித்தார்கள். தீர்க்கதரிசிகளும் கண்ணீரோடு ஜெபித்தார்கள். ஆயினும், ஜெபங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
சில நேரங்களில் தேவன் அவர்களின் ஜெபத்தை கேட்க மறுத்தார் .அவர்களுக்காக ஜெபித்த தீர்க்கதரிசிகளையும் தேவன் தடை செய்தார். (ஏசாயா 1:15, 58:1, 59:1,2) (எரேமியா 7:16, 11:14, 14:11) (எசேக்கியல் 20:4)
ஏன் இஸ்ரவேலர் ஜெபித்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை? ஜெபம் உபவாசம் ஆகியவைகளுக்கு முன்னால் வேறு ஏதோ ஒன்று அவசியமாய் இருக்கிறது. என்பதையே அது உணர்த்துகிறது.
நம்முடைய பாடுகளின் வேளையில் தேவ உதவியை தேடி அதிகமாக ஜெபிக்கவும், உபவாசிக்கவும் செல்லும் முன்பு தேவ உதவியைப் பெற வேதம் கூறுகின்ற ஒழுங்கு என்ன என்பதை பார்க்க வேண்டும்.
தேவனுடைய இரக்கத்தை பெறுவதற்கு முக்கியமான சில படிகளை நாம் கடக்க வேண்டியது அவசியம்.
1) நம்மை ஆராய்ந்து பார்த்தல் அவசியம்:-
தேவ உதவியை நாம் நாடும் போது முதலாவது தேவனுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவு நிலைகளை குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அவருடைய வார்த்தைகளை மதியாமல் மனம் போல வாழ்ந்து கொண்டிருந்திக்கலாம். சிலவேளை இவைகளே நம்முடைய துன்பங்களுக்கு காரணமாய் இருக்க முடியும்.
எனவே, முதலில் ஜெபம் அல்ல முதலில் வாழ்க்கையைச் சரிபார்த்தலே அவசியமாயிருக்கிறது.
கர்த்தருக்கு பிரியமற்ற பாவங்களை விடாமல் நாம் ஜெபித்துக் கொண்டும், உபவாசித்துக் கொண்டும் இருந்தால் எந்த நன்மையும் தோன்றாது.
ஏசாயா தீர்க்கதரிசி தெளிவாக கூறுகிறார்.
"மீட்க இயலாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை; கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகி விடவில்லை.
உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன; உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன". (#ஏசாயா 59:1,2)
எனவே, தேவன் நம் இக்கட்டில் இருந்து நம்மை விடுவிக்க வேண்டுமானால், முதலாவது அவருக்கு எதிராக நாம் செய்த பாவங்கள் என்னவென்று ஆராய்ந்து பார்த்து மனந்திரும்புதல் அவசியம்.
2) கண்களை மறைக்கும் காரியம்:-
சிலவேளை நம்முடைய வாழ்க்கையில், பாவம் போன்ற துன்மார்க்க செயல்கள் இல்லாமல் இருக்கலாம். ஆயினும், அதனால் நாம் நீதிமான்களாக இருக்கிறோம் என்று எண்ணிவிடக் கூடாது.
ஆகாய் தீர்க்கன் வாழ்ந்த காலத்து யூத மக்களிடையே துன்மார்க்க வாழ்க்கை இல்லை. அவர்கள் பெரிய பாவச் செயல்களில் ஈடுபடவில்லை. பின்னர் அவர்களுக்குத் ஏன் துன்பம்?
அவர்கள் துன்மார்க்கர் அல்ல ஆனாலும் சரியான சன்மார்க்கம் அவர்களிடம் இல்லை. கர்த்தருடைய பிரியத்தை அறிந்து அவர்கள் வாழவில்லை.
அவர்கள் தேவனுக்கு முன்பாக செய்ய வேண்டியதை செய்வதற்கு முதலில் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் சொந்தக் காரியங்களை முதலாவது இடத்தில் வைத்து, தேவனுடைய காரியங்களை இரண்டாவது இடத்திற்கு தள்ளினார்கள். இதுவே அவர்களின் குற்றம். (ஆகாய் 1:9)
சில பக்தி ஒழுக்கங்கள் நம்மிடம் இருந்திருக்கலாம், சில தயைமிக்க காரியங்கள் நம்மிடம் இருக்கலாம், சில ஏழைகளுக்கும் நாம் உதவியிருக்கலாம், ஆனால் இவைகள் யாவும் நாம் தேவனுக்கு பிரியமாக வாழ்ந்திருக்கிறோம் என்பதற்கான சரியான அடையாளங்களல்ல.
நாம் இயேசுவினால் வரும் இரட்சிப்பை பெற்று இருக்கிறோமா? நாம் நம்முடைய குணங்களாலும், சுபாவத்தாலும் தேவனை மகிமைப் படுத்தும் வாழ்க்கை வாழ்கிறோமோ? தேவனுக்கு நம்மை முழுமையாக அற்பணித்திருக்கின்றோமா? இவ்விதக் கேள்விகளுக்கு நம்முடைய பதில் என்ன என்பதே முக்கியம்.
இதற்கு அடுத்த படியில் தான் .தேவனுக்கு முன்பாக நம்முடைய விண்ணப்பங்களும், உபவாசங்களும் அங்கீகரிக்கப்பட்டு, நம்முடைய வாழ்க்கையில் மாபெரும் திருப்பங்கள் ஏற்பட வழிபிறக்கும்.
அப்பொழுது நம்முடைய ஜெபங்களும், உபவாசங்களும் வீண்போகாது! ஆமென்
அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் ‘இதோ! நான்’ என மறுமொழி தருவார். (ஏசாயா 58:9).