பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சிற்கு திடீர் விஜயம் செய்த பிரதமர்!

Mayoorikka
2 years ago
 பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சிற்கு திடீர் விஜயம் செய்த பிரதமர்!

தேசிய மற்றும் துறைசார் கொள்கைகளை வகுப்பதில் உதவி, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சிற்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அமைச்சிற்கு விஜயம் செய்து அதிகாரிகளுடன் அமைச்சின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

நாட்டின் வளர்ச்சியை மேலும் வினைத்திறனாக்க அனைவரும் திறம்பட திட்டமிட்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், திணைக்கள மற்றும் நிறுவன தலைவர்களிடம் ஒவ்வொரு திட்டத்தினதும் தற்போதைய முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் விலைமதிப்பு திணைக்களத்தில் தகுதியான உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காணப்படுவதாக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட மற்றும் பிரதம அரசாங்க மதிப்பீட்டாளர் டி.என்.முதுகுமாரன ஆகியோர் சுட்டிக்காட்டினர்.

தகுந்த நபர்களை விரைவில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு தொடர்பிலும் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தினார்.

டிஜிட்டல் மயமாக்கல் மூலம் முன்னெடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், எஞ்சிய கட்டங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி அனுரகுமார தெரிவித்துள்ளார்.

நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப பொதுமக்கள் தகவல்களின் துல்லியம் மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் வகையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் மதிப்பு குறித்து கவனம் செலுத்தி, அதை விரைவில் வெற்றிகரமாக நிறைவுசெய்யுமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.