இன்றைய வேத வசனம் 20.02.2022: எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 20.02.2022: எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.

பெத்தானியா என்ற சிறு கிராமத்தில் வாழ்ந்த மார்த்தாள், மரியாள் லாசரு என்பவரின் ஏழை குடும்பத்தை இயேசு அதிகமாக நேசித்தார்.

இயேசுவின் நெருங்கிய நண்பர் லாசரு என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வழியாக எங்கு சென்றாலும் லாசருவின் வீட்டிற்கு வந்தே போவார். 

ஆனால், இப்போது லாசரு வீட்டில் வேதனை சூழ்ந்து இருக்கிறது. வியாதிப் படுக்கையிலே விழுந்து லாசரு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்.

இயேசுவை அழைக்க ஆட்கள் அனுப்பப்பட்டனர். இயேசுவோ வரவில்லை. யாருக்கும் அதன் காரணமும் புரியவில்லை. ஆபத்து வேளையில் இவர் ஏன் வராமல் போய் விட்டார் என்று அவர்கள் மனம் நொந்தது.
இறுதியில் லாசரு மரித்தே போனான். இயேசு வரவில்லை. இயேசு இருந்திருந்தால் தங்கள் சகோதரன் மரித்திருக்கவே மாட்டான் என்ற எண்ணம் அவர்கள் உள்ளத்தை புண்ணாக்கியது.

எல்லாருடைய எண்ணமும் இயேசு வராமல் போனதை பற்றியே இருந்தது.
மரியாளே! இயேசுவோடு மிகவும் நெருங்கிய நண்பர்களாய் இருந்தீர்களே, இயேசு.. இயேசு என்று உயிரை விட்டீர்களே! நான் இயேசுவின் நண்பன் என்று உங்கள் தம்பி சொல்லிக்கொண்டே நடந்தானே! இன்று மரித்து மூன்று நாளாகியும் அந்த இயேசு வரவில்லையே...

இன்னுமா அவரைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்? இப்படி எல்லாம் ஊரார் கேட்டிருப்பார்கள். பதில் சொல்ல முடியாமல் அவர்கள் தவித்துப் போயிருக்கலாம்.

உங்கள் வாழ்க்கையிலும் இதே கேள்விகள் எழும்பியிருக்கலாம். இயேசு இருந்தால் ஏன் எனக்கு இவ்வளவு பாடுகள் என்று நொந்து போய் இருக்கலாம். பைபிளை தூக்கிக்கொண்டு நடந்தாயே, இயேசு வந்த வீட்டில் சந்தோஷம் என்று பாடினாயே... இன்று ஏன் இந்த நிலைமை? என்று மற்றவர்கள் கேட்கத் தகுந்த சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனாலும் நண்பர்களே, உங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருங்கள். இவைகள் யாவும் நன்மைக் கேதுவாகவே மாறும்.

இவைகள் உங்கள் வாழ்க்கையை அழித்து போடும்படி வராமல், இயேசு உங்களோடிருக்கிறார் என்பதை நிரூபிக்கவே வந்துள்ளது. அந்த விசுவாசக்கேடகத்தை உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள்.

லாசருவின் வீட்டார் இயேசுவுக்கு மிகவும் அன்பானவர்களே. எனவே, தம்முடைய மகிமையான செயலை ஜனங்கள் மத்தியில் வெளிப்படுத்தத் தேவன் அந்த வீட்டைத் தெரிந்தெடுத்தார். எனவேதான் அவர் வர காலதாமதம் ஆகிறது.

ஆனால் அவர் அறியாமல் எதுவும் நடக்கவில்லை. லாசருவை கல்லறையின் ஆழத்திலிருந்து எழும்பி நிரூபிக்கவும், லாசருவின் நண்பனாகிய இயேசுவே உயிர்த்தெழுதலும் ஜீவனுமானவர் என்பதை உலகம் அறிந்துகொள்ளும்படியாகவே இவைகள் சம்பவித்தன.

உங்கள் வாழ்விலும் இயேசு வெளிப்பட விரும்புகிறார். அதற்கு இந்தப்பாடுகளே காரணமாக அமையும். முடிவில் மகிமை விளங்கும்.

அன்பான முகநூல் வாசகர்களே, அவர் மாறாதவர்! மரியாளின் வீட்டை நோக்கி இயேசு காலதாமதமாகி வரவில்லை. மகிமை வெளிப்படச் சரியான வேளையில் வந்துள்ளார்.

உங்கள் கண்ணீரை துடைக்க அவர் வருகிறார். அது சரியான வேளை, உங்கள் துக்கம் சந்தோஷமாக மாற அவர் வரும் வேளை சரியானதே! எனவே பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.

ஆமென்!!

எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.
எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. (கொரிந்தியர் 1:4,5)