வடக்கு, கிழக்கு மக்களை ஒருபோதும் மறக்கமாட்டேன் - மைத்திரிபால சிறசேன

#SriLanka #NorthernProvince #Maithripala Sirisena
வடக்கு, கிழக்கு மக்களை ஒருபோதும் மறக்கமாட்டேன் - மைத்திரிபால சிறசேன

வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டியது தற்போதைய அரசின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியானது ஏனைய கட்சிகளை விட ஒரு சிறந்த கட்சியாகும். எமது கட்சியில் சிறியவர் பெரியவர் என்று நாங்கள் பார்ப்பதில்லை. அனைவரையும் சமமாக பார்ப்பது எங்களது சுதந்திரக் கட்சியாகும். அவ்வாறு கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கில் அதாவது தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றிருக்கின்றது .

வரலாற்றில் ஒரு முக்கியமான விடயமாகும். அதற்கு நான் அனைத்து உடுப்பிட்டி தொகுதி மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் . அத்தோடு எதிர்வரும் காலத்தில் எமது கட்சிக்கு அதாவது மாகாண சபை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போதும் எமது கட்சியை பலப்படுத்துவதற்கு அதிகளவில் மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும். எமக்கு ஆதரவு அளித்தால் நல்ல நிலைக்கு முன்நோக்கி கொண்டு செல்வோம்.

தற்போது நாட்டில் மக்கள் அதிகளவு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள் எரிவாயு, பசளை, அத்தியாவசிய பொருள் விலையேற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள்.

அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. அத்தோடு நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வட பகுதியில் பல திட்டங்களை முன்னெடுத்திருந்தேன். காணி விடுவிப்பு மற்றும் வீதி புனரமைப்பு போன்ற பல்வேறுபட்ட அபிவிருத்திகளை எனது ஐந்து வருட ஆட்சியில் வடக்கு கிழக்கு பகுதிகளில் முன்னெடுத்திருந்தேன்.

ஒன்றை கூறி வைக்க விரும்புகின்றேன். 2015 ஜனாதிபதித் தேர்தலில் என்னை வெல்ல வைப்பதற்கு வடக்கு மக்கள் அனைவரும் வாக்களித்தார்கள். அந்த நன்றிக் கடனுக்காகவே நான் எனது ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வட பகுதிக்கு அதிக தடவைகள் வருகை தந்து பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்து இருந்தேன்.

அந்த நன்றிக் கடனை நான் என்றும் மறக்க மாட்டேன். வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு எனது நன்றி கடன் என்றும் இருக்கும். அதை போலவே தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் எமது கட்சியை பிரதிநிதிதுவபடுத்தும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உடுப்பிட்டி தொகுதி யில் அதிகளவான வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஒரு இளமையான புத்திக் கூர்மையான ஒரு அரசியல்வாதி. தற்போது வடக்கில் ஒரு தலைவர் உருவாக்கினார் என்றால் அது எமது சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தான். எனவே அவரை பலப்படுத்துவதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லிணக்கம் சமாதானம் நிலைமைய ஏற்படுத்தி அவர்களை முன்னெடுத்து இந்த வடபகுதி என்னை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.