கடன் வழங்க வேண்டாம் என்று உத்தரவிடவில்லை – மத்திய வங்கி ஆளுநர்

Mayoorikka
2 years ago
கடன் வழங்க வேண்டாம் என்று உத்தரவிடவில்லை – மத்திய வங்கி ஆளுநர்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்குவதை நிறுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிடவில்லை. மாறாக கடன் வழங்கலின்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள கடன் எல்லையை மீற வேண்டாம் என்று மாத்திரமே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்குவதை நிறுத்துமாறு மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கும் உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகயிருந்தன.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குத் தொடர்ச்சியாகக் கடன் வழங்கப்பட்டுவருவதன் விளைவாக எதிர்வரும் காலங்களில் அரச வங்கி கட்டமைப்பினால் உரியவாறு இயங்க முடியாமல் போகக்கூடும் என்றும் சில வேளைகளில் அக்கட்டமைப்பு முழுமையாக சீர்குலைவடையும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் அரசாங்கத்தை எச்சரித்திருப்பதாக அச்செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும் அதன் காரணமாக அரச வங்கிக்கட்டமைப்பு சீர்குலைவடையும் பட்சத்தில், அதற்கான பொறுப்பைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திற்கு அறிவித்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்குவதை முழுமையாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.