அ.தி.மு.கவினர் தோல்வியடைந்ததாக அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது; எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றால் தோல்வியடைந்ததாக அறிவிக்கக்கோரி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து குறிப்பிட்டுள்ளார். கள்ள வாக்கு போட்டவரை பிடித்துக் கொடுத்த ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை பிடித்துக் கொடுப்பது தவறா? குற்றவாளிகளுக்கு முதலமைச்சர் துணை போவது வேதனை அளிக்கிறது. அதிமுக அனைத்தையும் சந்திக்க சட்டரீதியாக தயாராக உள்ளது. அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தோல்வி அடைந்ததாக அறிவியுங்கள் என அமைச்சர்கள் வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளதாக எங்களுக்கு தகவல்கள் வெளியாகியுள்ளன.” என்று குற்றம்சாட்டியுள்ளார்.