இன்றைய வேத வசனம் 24.02.2022: பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 24.02.2022: பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;

ரம்மி விளையாடுங்க பணம் சம்பாதியுங்க வாழ்க்கையை நாசம் பண்ணுங்கங்குற விளம்பரங்கள் தொலைக்காட்சியிலும், சமூக வலைதளங்களிலும் காட்டப்படுகின்றன.
இந்த விளம்பரங்களில் மக்கள் மிகவும் நம்புகிற கிரிக்கெட் வீரர்களும், சினிமா பிரபலங்களும் நடிப்பது வேதனையான ஒன்று.

இவ்விதமாக மக்களை சோம்பேறியாக்கி அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கும் இப்படியான ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பிரபலங்கள் விளம்பர தூதுவராக இருப்பது வேதனையிலும் வேதனை.
இந்தியாவில் ஊரடங்கு சமயத்தில் கூடுதலாக 15% மக்கள் இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த ஆபத்தான ஆன்லைன் சூதாட்டத்தை நம்முடைய நீதிமன்றம் திறன் சார்ந்த விளையாட்டு (Skill game) என்று அறிவித்திருக்கிறது. 

ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்! பெரிய பணக்காரர்கள் ஏழைகளாகிய நம்மிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் பறிக்கும் செயல் தான் இந்த ஆன்லைன் சூதாட்டம்.

முதலில், இதை திறன் சார்ந்த விளையாட்டு (Skill game) என்கிறார்கள். ஆனால், இதில் எந்த ஒரு வெளிப்படைத்தன்மையும் இல்லை என்பதே உண்மை.
இரண்டாவது, இந்த விளையாட்டை உருவாக்கியவர்கள் உங்களுடன் சேர்ந்து விளையாடினாலும் அது உங்களுக்குத் தெரியாது.

மூன்றாவது, உதாரணமாக  நாம் கணினியில் ஒரு சதுரங்க விளையாட்டை விளையாடுவது போல் தான் இது, அதில் Low, medium, high என்று மூன்று நிலைகள் இருக்கும்.

Low நிலையில் நாம் ஜெயிக்கலாம். Medium நிலையில் ஜெயிக்கிறதுக்கு கொஞ்சம் கடினம். High நிலையில் நாம் ஜெயிக்க முடியாது.

அதுபோலவேதான் நாம் அந்த விளையாட்டில் முதல் முதலில் நுழையும் போது welcome bonus னு சொல்லி உங்களுக்கு காசு கொடுத்து முதலில் உங்களைச் ஜெயிக்க வைத்து பின்பு உங்களை அந்த விளையாட்டுக்கு முழுமையாக அடிமைப்படுத்திய பின்பு Low நிலையிலிருந்து high நிலைக்குக் கொண்டுபோய் உங்களுடைய பணத்தை முழுவதுமாக சுரண்டி விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.
இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் வாழ்க்கையை இழந்தவர்கள் பல பேர்.

இன்னும் பலர் கடன் என்கிற வலையில் சிக்கி தற்கொலை செய்து கொண்டார்கள்.
இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் எப்படி மக்களை தங்கள் வலையில் பிடிக்கிறார்கள் என்று பார்த்தால், பிரபலமானவர்கள் மூலமாக விளம்பரம் செய்து மக்களை தங்கள் வலையில் சிக்க வைக்கிறார்கள்.
மக்களும் பிரபலங்களை நம்பி, இந்த ஆன்லைன் சூதாட்டம் என்கிற வலையில் சிக்கி தங்களுடைய வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள்.

இதை நீதிமன்றம் திறன் சார்ந்த விளையாட்டு என்று அறிவித்ததால், அனேகர் இதை விளையாடினால் மாதமொரு வருவாய் வரும் என்று நம்பி இந்த வலையில் விழுந்து விடுகிறார்கள்.
அதுமட்டுமின்றி தங்களுக்கு நெருங்கிய நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி அவர்களுடைய வாழ்க்கையையும் கெடுத்து விடுகிறார்கள். என்பதுதான் வேதனை.

இதற்குத் தீர்வுதான் என்ன?

இதை வாசித்து தெரிந்து கொள்வது இல்லங்க இதை உங்களுடைய வாழ்க்கையில் செயல்படுத்துவது தான் முக்கியம்.

இந்த ஆன்லைன் விளையாட்டில் நாட்டம் வைத்து ஏமாறும் கூட்டம் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறது.
எனவே, ஆசைக்கு அணையை போட்டால் மட்டுமே இதிலிருந்து உங்களால் தப்பித்துக்கொள்ள முடியும். ஆக முடிவு என் கையில் அல்ல உங்கள் கையில்தான் இருக்கிறது.

இதுவரை நான் இதை விளையாடியதில்லை என்று சொல்பவர்கள், தயவு செய்து இனியும் இதை ஒருபோதும் முயற்சித்து பார்க்காதீர்கள்.

இந்த ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடிக் கொண்டிருப்பீர்களானால், உடனடியாக அந்த செயலியை உங்கள் கைபேசியில் இருந்தோ அல்லது கணினியில் இருந்தும் உடனடியாக நீக்குங்கள்.

உழைத்து வருகிற பணமே ஆசீர்வாதம். அதிர்ஷ்டத்தில் வருகிற பணம் சாபமே! என்பதை உணர்ந்து உண்மையான கிறிஸ்தவர்களாக செயல்படுங்கள்! ஆமென்!

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள். (தீமோத்தேயு 6:10)