இராணுவத்தினரும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்: சரத் பொன்சேகா

Mayoorikka
2 years ago
இராணுவத்தினரும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்: சரத் பொன்சேகா

இலங்கையில் இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், முன்கள வீரர்களை விட பின்னால் இருந்த ஒரு சிலர் தவறுகளை இழைத்திருக்கலாம் என ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும் யுத்தத்தை இறுதிவரை வழிநடத்தியவருமான பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணை செய்து, யுத்தம் புரிந்த இராணுவத்தினரின் கீர்த்தியை பாதுகாக்க வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் அவர் சுட்டிக்காட்டினார்.

இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியமளித்தவர்களில் 99.9 வீதமானவர்கள் புலி ஆதரவாளர்கள் என அவர் கூறியுள்ளார்.

புலி ஆதரவாளர்கள் அல்லது அவர்களின் ஆசிர்வாதம் பெற்றவர்களிடம் இருந்தே சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் இனவழிப்பு செய்யப்பட்டனர் என்பது முற்றுமுழுதான பொய்யாகும் எனத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இடம்பெற்றிருந்தால், யுத்தத்தை நிறைவுசெய்து, ஒராண்டு செல்வதற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்ட போது, வடக்கு கிழக்கு மக்கள், யுத்தத்தை நிறைவுசெய்த இராணுவத் தளபதியான தனக்கு, 50 வீதத்திற்கும் அதிகமாக வாக்குகளை வழங்கியிருப்பார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்..

அதன் மூலம்  இராணுவத்தினர் அநீதி இழைத்தார்கள் என்பதை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள்.

யுத்தமுனையில் இருந்த அனைத்து துருப்பினரும் ஜெனீவா சாசனத்திற்கு அமையவும் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டுமே யுத்தம் புரிந்தனர்.

பின்னால் இருந்த ஒரு சிலர் தவறு செய்தார்களா என்பது குறித்து ஆராய்ந்து பார்த்து யுத்தம் புரிந்த, இராணுவத்தினரின் கீர்த்தியை பாதுாக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அத்துடன்  ஸ்ரீலங்காவின் இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களை அச்சமின்றி எதிர்கொள்வதற்கான திராணி கோட்டா மஹிந்த அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.