சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் சர்வதேச எடைதூக்கல் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்
சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் சர்வதேச எடைதூக்கல் போட்டியில் இலங்கையின் ஸ்ரீமாலி சமரகோன் தங்கப் பதக்கம் வென்றெடுத்ததுடன், டிலன்க இசுரு குமார வெண்கலப் பதக்கம் கைப்பற்றி இலங்கைக்கு பெருமை சேர்த்தனர்.
இந்த வெற்றியின் மூலம் '2022 பேர்மிங்ஹாம்' பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான தகுதியையும் பெற்றுக்கொண்டனர்.
பேர்மிங்ஹாம் பொதுநலவாயப் போட்டிக்கான தகுதியை பெற்றுக்கொள்வதற்கான சர்வதேச பளுதூக்கல் போட்டி நேற்று சிங்கப்பூரில் ஆரம்பமானது.
இதில் பெண்களுக்கான 49 கிலோ கிராம் எடைக்குட்பட்ட போட்டியில் பங்கேற்ற ஸ்ரீமாலி சமரகோன் ஸ்னெட்ச் முறையில் 65 கிலோ கிராம் எடை மற்றும், கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் 86 கிலோ கிராம் எடை என மொத்தமாக 151 கிலோ கிராம் எடையையும் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.
இதே போட்டிப் பிரிவில் பங்கேற்றிருந்த மற்றொரு இலங்கை வீராங்கனையான தினூஷா கோமஸ் ஸ்னெட்ச் முறையில் ஆரம்ப எடையான 63 கிலோ கிராம் எடையை தூக்குவதற்கு எடுத்த மூன்று முயற்சிகளிலும் தோல்வியைந்து வெளியேறினார்.
இதேவேளை, ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைக்குட்பட்ட் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் டிலன்க இசுரு குமார மொத்தமாக 238 கிலோ கிராம் எடையை தூக்கி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இப்போட்டிப் பிரிவின் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.