இன்றைய வேத வசனம் 27.02.2022: நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்
ரஷ்யாவுக்கு எதிராகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் எந்த நாடு வந்தாலும் அவர்கள் வரலாறு காணாத அழிவை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா உலக நாடுகளை எச்சரித்துள்ளது.
உலக வல்லரசாகிய ரஷ்யாவை எதிர்த்து நாங்கள் தனித்து போராடி வருகிறோம். எங்களுக்கு உதவ அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கோரிக்கை விடுத்தோம் ஆனால் எங்களுக்கு உதவ எந்த நாடுகளும் முன்வரவில்லை.
அவர்கள் அனைவரும் ரஷ்யாவை கண்டு அஞ்சுகிறார்கள். ஆனால் நாங்கள் ரஷ்யாவுக்கு அஞ்சப் போவதில்லை. நாங்கள் எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து போராடுவோம்.
இரண்டு நாட்களாக எங்கள் மீது நடக்கும் தாக்குதல்களை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
தலைநகரை கைப்பற்றி எங்கள் நாட்டின் அதிபரையும் அவர் குடும்பத்தையும் கொலை செய்வது தான் எதிரிப்படை நோக்கமாய் இருக்கிறது.
ஆனால், எங்கள் அதிபர் எங்கும் தப்பி போகமாட்டேன் மக்களோடு தான் இருப்பேன் என்று உறுதியாக இருக்கிறார். நாங்கள் தனித்து விடப்பட்டு இருக்கிறோம். என்று உக்ரைன் அரசும் கூறியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கவர்ச்சிகரமான வார்த்தைகளை நம்பி ரஷ்யாவை பகைத்த உக்ரைன் இன்று உலக வல்லரசாகிய ரஷ்யாவை எதிர்த்து தனியாக போராடி வருகிறது.
ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் காரியங்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து உக்ரைன் செய்து வருவதாக ரஷ்யா உக்ரைன் மீது குற்றம் சாட்டுகிறது. அதுவே போருக்கு காரணமாகவும் அமைந்து இருக்கிறது.
உலக வல்லரசுகளாகிய அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அதிகாரப் போட்டிக்கு உக்ரைன் பலியாக்கப்பட்டிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
உக்ரைன் மற்றும் ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், அங்கு போர் நிறுத்தம் ஏற்படவும், மக்களின் உயிர் காக்கப்படவும் நாம் ஜெபிப்பது நம்முடைய கடமையாக இருக்கிறது.
நாம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் அமைதிக்காக ஜெபிப்போமாக!
நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். (#யோவான் 17:15) ஆமென்!