முல்லைத்தீவில் தமிழர்களுக்கு சொந்தமான 2000 ஹெக்டேயர் காணியை அபகரித்துள்ள வனத்திணைக்களம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு சிராட்டிகுளம் பகுதியில் சுமார் 2000 ஹெக்டேயர் வரையான நிலப்பரப்பு முன்மொழியப்பட்ட வனப் பிரதேசங்களாக கடந்த இரண்டு நாட்களுக்குள் இரகசியமாக வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு சிராட்டிகுளம், நட்டாங்கண்டல் பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பொது மக்களுக்கு சொந்தமான சுமார் 2000 ஹெக்டேயர் வரையான நிலப்பரப்பு கடந்த இரண்டு நாட்களுக்குள் இரகசியமான முறையில் முன்மொழியப்பட்ட வனப் பிரதேசங்களாக வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு பெயர்ப் பலகைகள் இடப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிராட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவில் 75க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் வரையிலும், நட்டாங்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் 194 குடும்பங்களைச் சேர்ந்த 560 பேர் வரையிலும் வசித்து வருகின்றனர். குறித்த பிரதேசத்தில் நீண்ட காலமாக பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டு வந்த காணிகள் கடந்த கால யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், சிறு சிறு பற்றைக் காடுகளாகவும் காணப்பட்டன.
மீள்குடியமர்வின் பின்னர் மக்களால் துப்பரவு செய்யப்பட்டு பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற காணிகளும் இவ்வாறு வனத் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது சிராட்டி குளம், மூப்பன் குளம், நட்டாங்கண்டல், ஆகிய பகுதிகளில் கடந்த புதன் கிழமை முதல் வனவளத்திணைக்களத்தினரால் சிராட்டி குளம் முன்மொழியப்பட்ட வனப்பிரதேசங்கள் என்ற பெயர்ப்பலகைகள் இடப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசங்களுக்குப் பொறுப்பாக இருக்கின்ற கிராம அலுவலர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கிராம மட்ட அமைப்புக்களோ அல்லது பிரதேச சபை உறுப்பினர்களோ எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை என்றும் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது