தனது நாட்டை காக்கும் பணியில் துப்பாக்கியுடன் களமிறங்கிய மிஸ் உக்ரைன் அழகி:அனஸ்தீசியா லென்னா

Keerthi
2 years ago
தனது நாட்டை காக்கும் பணியில் துப்பாக்கியுடன் களமிறங்கிய மிஸ் உக்ரைன் அழகி:அனஸ்தீசியா லென்னா

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே நடந்து வரும் மோதலில் 5,300 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 116 குழந்தைகள் உள்பட 1,684 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ராணுவத்தில் சேரும்படி அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தனது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில் டென்னிஸ் வீரர், அந்நாட்டின் இளம் எம்.பி. என பலர் ஆர்வமுடன் படைகளில் சேர்ந்து வருகின்றனர். சொந்த நாட்டில் வசிக்கும் மக்கள் ராணுவத்தினரிடம் பயிற்சி பெறுகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு மிஸ் உக்ரைன் பட்டம் வென்ற அழகியான அனஸ்தீசியா லென்னா (31) என்பவர் தனது நாட்டை காக்கும் பணியில் இறங்கி உள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், படையெடுக்கும் நோக்குடன் உக்ரைன் எல்லையை கடக்கும் ஒவ்வொருவரும் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுடன் துணை நில்லுங்கள், உக்ரைனுடன் கைசேருங்கள் என இரு ஹேஷ்டேகையும் பதிவிட்டுள்ளார்.