அதிபயங்கர வெப்ப அழுத்த குண்டு, கொத்துக் குண்டுகளை உக்ரைனில் ரஷ்யா பயன்படுத்துவாதகக் குற்றச்சாட்டு!

Mayoorikka
2 years ago
அதிபயங்கர வெப்ப அழுத்த குண்டு, கொத்துக் குண்டுகளை உக்ரைனில் ரஷ்யா பயன்படுத்துவாதகக் குற்றச்சாட்டு!

தடை செய்யப்பட்ட ஆபத்தான கொத்துக் குண்டுகள் (cluster bombs) மற்றும் அணுகுண்டுக்கு அடுத்து ஆபத்தானதாக கருதப்படும் வெப்ப அழுத்த வெடிகுண்டுகளை (thermobaric weapon) வீசி உக்ரேனியர்களை ரஷ்ய கொன்று குவிப்பதாக அமெரிக்காவிற்கான உக்ரைனின் தூதுவர் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

அத்துடன், பல்வேறு சர்வதேச மனித உரிமைக் குழுக்களும் ரஷ்யா மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளன.

சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் (Human Rights Watch) ஆகிய இரண்டு அமைப்புக்களும் ரஷ்யப் படைகள் பரவலாக தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியதாகத் தெரிய வருவதாகக் கூறியுள்ளன.

வட-கிழக்கு உக்ரைனில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த பாலர் பாடசாலை ஒன்றின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக சர்வதேச மன்னிப்புச் குற்றம் சாட்டியது.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்று சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்கரோவா, உக்ரைனில் ரஷ்யா அணுகுண்டுக்கு அடுத்தபடியாக மிக மோசமான அழிவை ஏற்படுத்தக் கூடியது எனக் கருதப்படும் தெர்மோபாரிக் எனப்படும் வெப்ப அழுத்த வெடிகுண்டுகளை (thermobaric weapon) வீசி உள்ளதாகத் தெரிவித்தார்.

தெர்மோபாரிக் வெடிகுண்டுக்குள் உள்ள அமிலம் மற்றும் எரிபொருள் கலவை வெடித்தால் வெப்ப அலைகள் உருவாகி குண்டு விழும் பகுதிகளில் உள்ள மனிதர்கள் , கட்டடங்கள் அனைத்தும் அழிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

தெர்மோபாரிக் குண்டு வெடிக்கும் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றிலிருந்து ஒக்ஸிஜன் உறிஞ்சப்படும். இது பெரும் அழிவுகளை உண்டாக்கும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் உக்ரைனில் நடந்த மோதலில் தெர்மோபரிக் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. சனிக்கிழமை பிற்பகல் உக்ரேனிய எல்லைக்கு அருகில் ரஷ்யா பயன்படுத்தியதாக நம்பப்படும் தெர்மோபரிக் பல்குழல் ஏவு கருவியை (thermobaric multiple rocket launcher) தனது குழு ஒன்று கண்டதாக சி.என்.என். ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தெர்மோபரிக் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக வெளியாகும் செய்திகளை தாம் பார்த்ததாகவும் ஆனால் ரஷ்யா அத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார்.

அது உண்மையாக இருந்தால், அது ஒரு போர்க்குற்றமாக இருக்கும் என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்துக் கேட்டபோதும் வொஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் பதிலளிக்கவில்லை என ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது