ரஷ்யாவின் வோட்கா விற்பனைக்கு அமெரிக்காவில் தடை..! உக்ரைன் மதுவிற்பனை அதிகரிப்பு..!

Keerthi
2 years ago
ரஷ்யாவின் வோட்கா விற்பனைக்கு அமெரிக்காவில் தடை..! உக்ரைன் மதுவிற்பனை அதிகரிப்பு..!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளனர். போரை நிறுத்த வேண்டும் என்று பலரும் ரஷ்யாவிற்கு வேண்டுகோளும், கண்டனங்களும் தொடர்ந்து குவிந்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவிற்கு பலரும் பலவாறு தங்களது எதிர்ப்பை கூறி வருகின்றனர்.

இந்தப் போர் தொடங்கியது முதலே ரஷ்யாவிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் அமெரிக்கா தற்போது புதிய வடிவத்தில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. அமெரிக்காவின் முக்கிய மாகாணமான ஓஹியோ, நியூ ஹாம்ப்ஷ்யர், பெனிசில்வேனியா, உட்டா உள்பட சில மாகாணங்களில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட வோட்கா விற்பனையை தடை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாகாண ஆளுநர்கள் பிறப்பித்துள்ளனர்.

அமெரிக்காவில் வோட்கா, ஒயின், பீர் போன்ற மதுபானங்கள் உணவுப்பொருட்களில் இரண்டற கலந்த ஒன்றாக உள்ளது. இதனால், அமெரிக்காவில் வோட்கா மட்டும் 1.4 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதில், ரஷ்யாவில் இருந்து மட்டும் 18.5 மில்லியன் டாலர் வோட்கா இறக்குமதி செய்யப்படுகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் ரஷ்யாவின் பொருளாதாரம் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. இருப்பினும், அமெரிக்கர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிப்பதற்காகவும், உக்ரைனுக்கு தங்களது ஆதரவை தெரிவிப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இன்னும் சில அமெரிக்காவில் உள்ள பார் உரிமையாளர்கள் மற்றும் மதுபானக் கடைகள் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்க வித்தியாசமான முறையை கையாண்டுள்ளனர். அதாவது, உக்ரைன் நாட்டில் தயாரிக்கப்பட்ட வோட்கா விற்பனையை அதிகரித்துள்ளனர், அதாவது கோசக் மற்றும் வெக்டோர் ஆகிய நிறுவன வோட்காக்களின் விற்பனையை அதிகரித்துள்ளனர்.

ரஷ்யாவின் பிராண்டட் வோட்காக்கள் பலவும் அமெரிக்காவிலும், மற்றும் பிற நாட்டிலும் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் விற்பனையாகும் மிகவும் பிரபலமான வோட்காவான ஸ்டோலிச்னயா ரஷ்யாவின் அண்டை நாடானா லேட்வியாவில் தயாரிக்கப்படுகிறது. அதன் உரிமையாளர் சுவிட்சர்லாந்து நாட்டில் வசித்து வருகிறார். ஏற்கனவே ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.