உக்ரைன் என்பதற்கு பதிலாக ஈரான் என குறிப்பிட்ட ஜோ பைடன்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

Nila
2 years ago
உக்ரைன் என்பதற்கு பதிலாக ஈரான் என குறிப்பிட்ட ஜோ பைடன்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 7-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், ரஷிய தாக்குதலுக்கு ஆளாகியுள்ள உக்ரைனுக்கு ஆதரவு திரட்டும் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  பேசினார். அப்போது அவர் உக்ரேனியர்கள் என்றழைப்பதற்கு பதிலாக ஈரானியர்கள் என்று உச்சரித்தார். அவருடைய இந்த பேச்சால் அவர் கேலி செய்யப்பட்டுள்ளார். அவருடைய புத்திக்கூர்மையை நகையாடி வருகின்றனர்

அவர் பேசியதாவது, “புதின் கீவ் நகரை சுற்றி ராணுவ டேங்குகளில் வலம் வரலாம். ஆனால், அவர் ஒருபோதும்  ஈரானிய மக்களின் இதயங்களையும் ஆன்மாக்களையும் பெறமாட்டார்” என்று பேசினார். அவர் உக்ரேனியர்களை ‘ஈரானிய மக்கள்’ என்று தவறாகக் குறிப்பிட்டார்.

இந்த மோசமான தருணம் உடனடியாக டுவிட்டரில் "ஈரானியன்" என்ற வார்த்தையுடன் டிரெண்டாகத் தொடங்கியது.

இது தொடர்பாக ஏபிசி நியூஸ் / தி வாஷிங்டன் போஸ்ட்டின் புதிய கருத்துக் கணிப்பு, வெளியிடப்பட்டது. அதில் 54 சதவீத அமெரிக்கர்கள் அவருக்கு "ஜனாதிபதியாக திறம்பட பணியாற்ற தேவையான மனக் கூர்மை" இருப்பதாக நம்பவில்லை என்று தெரிவித்து அதிர்ச்சியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகமே உற்றுநோக்கும் முக்கிய தலைவரான அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மிக முக்கியமான உக்ரைன் விவகாரத்தில் சரியான தகவல்களை  ஞாபகத்தில் வைத்து கொள்ளாமல் குழப்பத்தில் இருப்பது வேதனையடைய செய்கிறது.