ரஷ்ய பணக்காரர்களின் தனி விமானம், விலையுயர்ந்த வீடுகள் பறிமுதல்- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

Keerthi
2 years ago
ரஷ்ய பணக்காரர்களின் தனி விமானம், விலையுயர்ந்த வீடுகள் பறிமுதல்- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் முயற்சி செய்துவந்தது. உக்ரைனின் இந்த முயற்சிக்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உக்ரைன் அதைக் கண்டுகொள்ளவில்லை.

அதனையடுத்து, உக்ரைன் நாட்டைச் சுற்றி ராணுவத்தை நிறுத்தியது ரஷ்யா.

அதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத் தாக்குதல் தொடர்ந்தது. இது உலக நாடுகளை பேரதிர்ச்சிக்குள்ளாகியது. அதனையடுத்து, ரஷ்யாவின் மீது உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதாரத்தடை விதித்து வருகின்றன. ரஷ்ய விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லையில் பறக்கக் கூடாது என்று பல்வேறு நாடுகளும் தடைவிதிதுள்ளன. அமெரிக்காவும் இந்தத் தடையை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடாவின் நாட்டின் பொருளாதாரத் தடைகளைக் கடந்து உலகின் மிகப்பெரும் நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவுக்கு வர்த்தகத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளன.

ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள், நைக், ஃபோர்டு போன்ற முன்னணி நிறுவனங்கள் ரஷ்யாவுடனான வர்த்தக தொடர்பை துண்டித்துள்ளன. அதேபோல, ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் ரஷ்யாவுடனான ஏற்றுமதியை நிறுத்துகிறோம் என்று அறிவித்துள்ளது. இது ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடியாக அமைந்துள்ளது. இந்தநிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து தொலைக்காட்சியில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 'ரஷ்யா மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுவருகின்றன.

ப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 27 உறுப்பினர்கள் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் பிரிட்டன், கனடா, ஜப்பான், கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக ரஷ்யாவை குற்றம்சாட்டுகின்றன. புதின் இதுவரையில் அவர் இல்லாததைவிட தற்போது உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எங்களுடைய கூட்டாளிகளுடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக வலிமையான பொருளாதாரத் தடைகளை விதித்துவருகிறோம்.

சர்வதேச நிதி அமைப்பிலிருந்து ரஷ்யாவின் பெரிய வங்கிகளை நீக்கியுள்ளோம். ரஷ்ய நாட்டின் பணமான ரூபிளை ரஷ்யாவின் மத்திய வங்கி பாதுகாப்பதைத் தடை செய்துள்ளோம். புதினின் 630 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய போர் பணத்தை மதிப்பில்லாததாக்கியுள்ளோம். தொழில்நுட்பங்களை ரஷ்யா பயன்படுத்துவதைத் தடை செய்ததன் மூலம் அவர்களுடைய பொருளாதாரத்தை வலுவாக்குவதைத் தடை செய்துள்ளோம். ரஷ்ய பணக்காரர்களின் விலையுயர்ந்த வீடுகள், தனி விமானங்கள், விலை உயர்ந்த படகுகளை கைப்பற்ற சிறப்பு குழுக்களை அமைக்கவுள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.