கார்கிவ் நகரிலிருக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு

Keerthi
2 years ago
கார்கிவ் நகரிலிருக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு

ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் முயற்சி செய்துவந்தது. உக்ரைனின் இந்த முயற்சிக்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உக்ரைன் அதைக் கண்டுகொள்ளவில்லை.

அதனையடுத்து, உக்ரைன் நாட்டைச் சுற்றி ராணுவத்தை நிறுத்தியது ரஷ்யா. அதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத் தாக்குதல் தொடர்ந்தது.

இது உலக நாடுகளை பேரதிர்ச்சிக்குள்ளாகியது. அதனையடுத்து, ரஷ்யாவின் மீது உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதாரத்தடை விதித்து வருகின்றன. ரஷ்யாவின் செயல்பாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்துவருகிறது. இந்த போரின் காரணமாக உக்ரைன் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா இந்த பயங்கரமான தாக்குதலின் காரணமாக இதுவரையில், 5,000 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் ராணுவ வீரர்கள் ஆவர். பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ரஷ்யா நாட்டுத் தரப்பிலும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், பெலாரஸ் நாட்டில் வைத்து உக்ரைன் மற்றும் ரஷ்யா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

உக்ரைன் மீதான போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷோய்கு தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் கடும் கண்டனங்களுக்குப் பிறகு ரஷ்யா ராணுவத் தாக்குதலிலிருந்து பின்வாங்கவில்லை.

ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் கடந்த 6 நாளில் 6,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். இந்தநிலையில் ரஷ்ய எல்லையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கார்கிவ் பகுதியிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கார்கிவ் பகுதியிலிருக்கும் இந்தியர்களுக்கான அவசர அறிவுரை. உங்களுடைய சொந்த பாதுகாப்பு காரணங்களுக்காக கார்கிவ் பகுதியிலிருந்து உடனடியாக நீங்கள் வெளியேறவேண்டும். கார்கிவ் பகுதி பேரழிவு நிலையில் இருப்பதால் உடனடியாக வெளியேறவேண்டும் என்று மீண்டும் சொல்கிறோம். அவர்களால் எவ்வளவு விரைவாக முடிகிறதோ பெசோசின், பாபாயே, பெஸ்லியூடோவ்கா பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

உக்ரைன் நேரத்துக்கு மாலை 6 மணிக்கு முன்னதாக இந்த இடங்களுக்கு செல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று கார்கிவ் பகுதியில்தான் இந்திய மாணவர் நவீன் சேகரப்பா ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தார்.