ரஷ்யாவிற்கு அடுத்த செக் வைத்த...ஹார்லி - டேவிட்சன் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Keerthi
2 years ago
ரஷ்யாவிற்கு அடுத்த செக் வைத்த...ஹார்லி - டேவிட்சன் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதை முன்னிட்டு, ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள், அடிடாஸ், நைக் நிறுவனங்களின் வரிசையில் பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹார்லி - டேவிட்சன் ரஷ்யா உடனான வணிகத்தை துண்டித்துள்ளது.

உக்ரைன் மீது தனது படையெடுப்பை ரஷ்யா 7வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் தலைநகரான கீவ் நகரைத் தொடர்ந்து, அதன் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. கார்கிவ் நகரில் பொதுமக்கள் வாழும் குடியிருப்புப் பகுதியில் நடத்திய தாக்குதலில், கர்நாடகாவைச் சேர்ந்தவருமான நவீன் சேகரப்பா என்ற மாணவன் உயிரிழந்தது இந்தியாவை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரைனில் கார்கிவ், செரீனிஹிவ் ஆகிய நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று கார்கிவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரிய மோதலாக இந்த போர் பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டிக்கும் விதமாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா உள்ளிட்டவை பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் பல கட்டுப்பாடுகளை உலக நாடுகள் ரஷ்யாவிற்கு விதித்து வரும் நிலையில், ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள், நைக், ஃபோர்டு போன்ற முன்னணி நிறுவனங்கள் ரஷ்யாவுடனான வர்த்தக தொடர்பை துண்டித்துள்ளன.

தற்போது இந்த வரிசையில் உலகிலேயே பிரபலமான பிரீமியம் மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இணைந்துள்ளது. நேற்று ஹார்லி டேவிட்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, உக்ரைனின் ரஷ்யா மீதான படையெடுப்பை தொடர்ந்து, அதனுடனான வணிகத்தை துண்டித்து கொள்வதாகவும், இனி ரஷ்யாவிற்கு ஹார்லி டேவிட்சன் நிறுவன பைக்குகள் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது என்றும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே மேற்கத்திய நிறுவனங்களான ஜெனரல் மோட்டார்ஸ் கோ மற்றும் ஜெர்மனியின் டெய்ம்லர் டிரக் ஹோல்டிங் ஏஜி ஆகியவை ரஷ்யாவில் தனது செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ள நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்த முடிவு ரஷ்யாவிற்கு கூடுதல் பொருளாதார நெருக்கடியை கொடுக்கும் என தெரிகிறது.

எட்ஜ்வாட்டர் ரிசர்ச்சின் மூத்த ஆய்வாளரும் பங்குதாரருமான கிறிஸ் ஹாட்சன் கூறுகையில், "மில்வாக்கியை தளமாகக் கொண்ட செயல்படும் ஹார்லியின் பைக்குகள் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் தான் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த இரண்டுடன் ஒப்பிடுகையில் ரஷ்யாவில் ஹார்லி-டேவிட்சன் டீலர்ஷிப்கள் மிகவும் குறைவானது. ரஷ்யாவில் சுமார் 10 டீலர்கள் மட்டுமே உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்காக பிரத்யேக பைக்குகளை வடிவமைக்க இருந்த முடிவை கைவிட்டுள்ள ஹார்லி-டேவிட்சன், அந்நாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பைக்குகளை வேறு நாட்டிற்கு விற்பனைக்கு அனுப்புவது குறித்து திட்டமிட்டு வருகின்றனர். மேலும் ரஷ்யா உடனான வணிக தொடர்பு துண்டிக்கப்பட்டது தற்காலிகமானதா? அல்லது நிரந்தரமானதா? என ஹார்லி- டேவிட்சன் இதுவரை எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.