ஜனாதிபதியின் அதிகாரத்தை பலப்படுத்தப் போவதாக கூறியவர்கள் அரசாங்கத்தினை விமர்சிக்கின்றனர்! சாணக்கியன் பதிலடி

Mayoorikka
2 years ago
ஜனாதிபதியின் அதிகாரத்தை பலப்படுத்தப் போவதாக கூறியவர்கள் அரசாங்கத்தினை விமர்சிக்கின்றனர்! சாணக்கியன் பதிலடி

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு கையை உயர்த்தி, ஜனாதிபதியின் அதிகாரத்தை பலப்படுத்தப் போவதாக கூறியவர்கள்,   அரசாங்கத்தின் செயற்பாடுகளை இன்று விமர்சிக்கின்றனர் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற இராசமாணிக்கம் சாணக்கியன், அமைச்சர் விமல் வீரவங்ச போன்றவர்கள் பொய்யான தேசப்பற்றாளர்களின் வேடத்தை மீண்டும் இட்டுள்ளனர் என்றார்.

நிதியமைச்சர், மத்திய வங்கியின் ஆளுநர் தத்தமது கடமைகளை முறையாக முன்னெடுக்கவில்லையெனில், அப்பதவியிலிருந்து நீக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவும். அதனைவிடுத்து, எதிர்க்கட்சியின் அரசியலை செய்வதற்கு முற்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இல்லா​தொழிக்குமாறு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கை​யெழுத்து வேட்டை, வாழைச்​சேனையில் இன்று (03) முன்னெடுக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு எவ்வாறு மீள்வது என்பது தொடர்பில், பங்காளிகளில் 30 பேர் இணைந்த ஒரு குழு, கூட்டமொன்றை நடத்தியது. அதில், நிதியமைச்சரின் செயற்பாடுகளை அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையாக விமர்ச்சித்துள்ளார். இவ்வாறானவர்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக என்ன செய்தார்கள். தற்போது மீண்டும் போலி​யாக தேசப்பற்றாளர் வேடமிட்டுள்ளனர்.